பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

ஐம்பத்தி ஏழாம் அத்தியாயம்

சிம்லா மகாநாடு

1946 ஜூன் மாதம் 15-ந் தேதி, நேருவும் இதர தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர். சிம்லாவில் நடந்தது ஒரு மகாநாடு. இந்த மகாநாட்டில் கலந்துக்கொள்ளும்படி நேரு, ஆஸாத், ஜின்னா ஆகியோரை அழைத்தார் வைசிராய் வேவல். வகுப்புவாதத்தை விசிறி, அதை வைத்தே இட ஒதுக்கீடு என்ற பழைய முறையையே ஆதரித்தார் வைசிராய்.

சிம்லா மகாநாட்டின் போக்கு அவ்வளவாக உற்சாக மூட்டவில்லை. எனினும் இவ்வளவு தடைகளிடையே ஒரு சிறிய நம்பிக்கை மிளிர்ந்தது நேருவின் மனத்தில்.

மகாநாடு முடிவதற்கு சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் லேபர் (தொழிலாளர்) கட்சி வெற்றிபெற்றது. அட்லி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்தக் கட்சி இந்தியாவிடம் பரிவு கொண்டிருந்தது. எனவே நமக்கு சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என நம்பினார் நேரு.

ஆனால் மகாநாடு வெற்றி பெறவில்லை ; முறிந்தது.

நேதாஜியின் படை இந்தியா நோக்கி வருவதாக இருந்தது. அதற்குள் தாய்வான் ரேடியோ அவர் விமான விபத்தில் இறந்ததாக ஒலிபரப்பியது.

நேதாஜியின் இந்திய தேசீய இராணுவப் படையைச் சேர்ந்த மூவர் மீது வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்திய தேசீய இராணுவ வீரர்களுக்காக கோர்ட்டில் தோன்றி பரிந்து பேசினார் நேரு.