பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34

காங்கிரஸ்காரர்கள் சட்டசபை தேர்தல்களிலே போட்டி இடவேண்டும், சட்டசபைகளைக் கைப்பற்ற வேண்டும்; சுதந்திரப் போராட்டத்திற்கு சட்டசபைகளையும் உபயோகிக்க வேண்டும் என்று கூறினர் சிலர். தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் இவர்களிலே முக்கியமானவர். மோதிலால் நேரு இவருக்கு ஆதரவாக நின்றார்.

சட்டசபை பிரவேசம் கூடாது. நிர்மாணத் திட்டத்திலே தான் கருத்துச் செலுத்த வேண்டும். அதன் மூலம் அடுத்த போராட்டத்திற்கு நாட்டை தயார் செய்யவேண்டும் என்பது காந்தியின் கருத்து.

முன்னே கூறப்பட்டவர் மாறுதல் வேண்டுவோர் என்று அழைக்கப்பட்டனர். பின்னே கூறப்பட்டவர் மாறுதல் வேண்டாதார் என்று அழைக்கப்பட்டனர். இவ்விதம் இரு பிரிவாக பிரிந்து நின்றனர் காங்கிரஸ்காரர்.

ஜவஹரின் உள்ளம் எங்கு சென்றது? காந்தி பக்கமே சென்றது. இளைய நேருவையும் தம் பக்கம் இழுக்க முயன்றார் சி. ஆர். தாஸ். ஆனால் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை. தோல்வியே அடைந்தார். இளைய நேரு காந்தியின் வலது கரமாகவே நின்றார்.

இந்த சமயத்திலே நாடெங்கும் முனிசிபல் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தல்களிலே காங்கிரஸ்காரர்கள் கலந்துக் கொண்டார்கள், போட்டியிட்டார்கள். பலன் என்ன?

கல்கத்தா நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சி. ஆர். தாஸ். பம்பாய் கார்ப்பரேஷன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வித்தல் பாய் படேல், ஆமதாபாத் முனிசிபல் தலைவரானார் வல்லபாய் படேல். அலகாபாத் முனிசிபல் தலைவரானார் ஜவஹர்லால் நேரு, இப்படியாக காங்கிரஸ்காரர் பல ஸ்தல ஸ்தாபனங்களிலே புகுந்தனர்; பதவிகளைக் கைப்பற்றினர்.