பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 37

அழைச்சுண்டு போகட்டும். பாசம் மாறாமல் இருந்தால் போதும்.

இப்போ அப்பா என்கையில் சேகர் படு சீரியஸ்ஸா யிருக்கிறான். அவன் சீரியஸ்ஸாயிருப்பதால் குரலில் அமைதி கூடுகிறது. சாந்தன் சேகர் குரலை ஒரு உச்சத்துக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று கடைபிடித்து வருகிறான். எந்தக் காரியத்துக்கும் சளைக்க மாட்டான். கெளரவம் பார்க்க மாட்டான்.

"அப்பா, உங்கள் துக்கம் பெரிசு. எங்களுக்குத் தெரிகிறது. உங்கள் இழப்பு இரட்டிப்பு. ஒன்று அபிதாவை இழந்துவிட்டீர்கள். அடுத்து விசாலமும் போய்விட்டாள். எது முன்னது எது பின்னது எடைபோட, உங்களைத் தேற்ற எங்களுக்குத் தகுதியில்லை. உங்கள் துக்கத்தை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அப்பா- நீங்கள் எங்களுக்கு வேண்டும். கண்டிப்பாக வேண்டும்ப்பா’ அவன் கண்கள் சிவந்துவிட்டன. என் கைகளைப் பிடித்துக் கொண்டான். “அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்பா அதுக்கு மேல் எங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை.”

எனக்குக் கண்கள் உறுத்தக்கூட இல்லை. கண்ணிர் வறண்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. விழிகளில் ஈரப்பசைக்கு ஒர் தெம்பு வேண்டும்.

கண்ணன். “நான் வேணுமானால் உங்களுக்குப் பதிலாக ஐயன்பேட்டை போய் வருகிறேன். சாயங்காலம் திரும்பி விடுகிறேன்.”

சொல்லிவிட்டு உடனே கிளம்பி விட்டான்.

சேகர் கூடத்துக்குப் போய்விட்டான்.

ஹைமாவதி சமையலறையில் வேலையாயிருக்கிறாள்.