பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

செளந்தர கோகிலம்



சயனித்துக் கொண்டான். அவன் அவ்வாறு வலுகட்டாயத்தின் மேல், சிறிதளவு போஜனம் செய்ததனால், அவனது தாகவிடாய் தணிந்தது. ஆனாலும், மோகவிடாய் முன்னிலும் அதிகரித்தது. மேன்மாடத்தில் தேஜோ மயமாக நின்று சிரித்த சுந்தரமான முகம் அப்போதும், அவனது உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பருகிக் கொண்டிருந்தது. அவன் விவரிக்க முடியாத பரம வேதனை அடைந்தவனாய் அந்தக் கொடிய இரவைக் கழித்துக் கொண்டிருந்தான்.

அவனது நிலைமை அவ்வாறிருக்க, கற்பகவல்லியம்மாள், பூஞ்சோலையம்மாள், கோகிலாம்பாள், செளந்தரவல்லி முதலிய நால்வரும் ஒரு பந்தியாக உட்கார்ந்து விருந்துண்ணத் தொடங்கி, நெடுநேரம் வரையில் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்த படியே தங்களது போஜனத்தை முடித்துக் கொண்டு எழுந்தனர். கற்பகவல்லியம்மாளுக்கு மாத்திரம், தனது புதல்வன் கால்வயிறு கூட உண்ணவில்லையென்பது தெரிந்த மையால், அது அவளது நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும், தானும் அவர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொள்ளக் கூடாதென்ற எண்ணத்தினால், பூர்த்தியாக விருந் துண்டு, பூஞ்சோலையம்மாளிடத்தில் தனது மனதை விட்டு ஒரு குழந்தை போல வெகு தாராளமாகவும் வேடிக்கையாகவும் சம்பாவித்துக் கொண்டிருந்தாள்.

அவ்வாறு அவர்களது சாப்பாடு முடிந்த பிறகு அவர்களுக்கு இருந்த உற்சாகமும், மனவெழுச்சியும் கட்டிலடங்காது இருந்த மையால், வேலைக்காரிகளையெல்லாம் தங்களது போஜனத்தை முடித்துக் கொண்டு படுக்கும்படி சொல்லியனுப்பி விட்டு, அவர்கள் தங்களது இன்பகரமான சம்பாஷணையை மேலும் நடத்தலாயினர். கற்பகவல்லியம்மாளும், பூஞ்சோலையம்மாளும் எதிரெதிராக இருந்த இரண்டு ஸோபாக்களின் மீது உட்கார்ந்து கொண்டனர். கோகிலாம்பாள் ஒருபுறமாக விரிக்கப்பட்டிருந்த ஒரு ஜமக்காளத்தின்மீது கற்பகவல்லியம்மாள் பார்க்காதபடி மறைவாக உட்கார்ந்து கொண்டாள், செளந்தரவல்லி வழக்கமாக ஒவ்வொரு நாளிலும் தான் சயனித்துக் கொள்ளும் சொகுஸான ஒரு மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டு அப்பாடா என்று சொல்லிக் கொண்டு திண்டுகளில் சாய்ந்து கொண்டாள்.