பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

செளந்தர கோகிலம்



எதிர்பார்த்துப் பார்த்து, சகிக்க இயலாத சஞ்சலத்தில் ஆழ்ந்து அந்தத் தரும சங்கடத்தில் தாம் என்ன செய்வது என்பதை அறியாமல் தத்தளித்திருந்தனர். செளந்தரவல்லி நெடுநேரமாக போஜனம் செய்யவில்லையே என்ற கவலையும் கலக்கமும் ஒரு புறத்தில் எழுந்து அவர்களது மனதில் பெருகி வதைத்துக் கொண்டிருந்தன. ஆகையால், அவர்கள் செளந்தரவல்லியைச் சூழ்ந்து ஓயாமலும் முற்றுகை போட்டு, பலவந்தமாக அவளைத் தூக்கிக் கொணர்ந்து இலைக்கருகில் உட்கார வைத்து ஆகாராதி களை எடுத்து பலவந்தமாக வாயில் ஊட்டி விட்டனர். அவ்வாறு அந்த இரவு கழிய மறுநாள் வந்தது. எல்லோரும் எழுந்து ஏதோ ஒவ்வொரு வேலையில் தத்தம் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தனர். செளந்தரவல்லி ஒருத்தியே தனது சயனத்திற்கு அடிமையாக இருந்து அளவற்ற துயரமுற்றிருந்தாள். கோவிந்தபுரத்தார் அப்போதும் யோசனை செய்துகொண்டு எவ்வித முடிவிற்கும் வராமல் இருக்கிறார்களோ, அல்லது, அவர்களுக்குச் செளந்தரவல்லியைக் கட்டிக்கொள்ள விருப்பம் இல்லாமையால் அலட்சியமாக இருந்து விட்டார்களோ என்று பூஞ்சோலையம்மாளும் கோகிலாம்பாளும் ஐயமுற்றனர். செளந்தரவல்லியின் வேதனையைக் கருதித் தாங்களே யாரையா கிலும் மைலாப்பூருக்கு அனுப்பி அவர்களது அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு வரச் செய்யலாமா என்ற ஒரு நினைவு தோன்றியது. ஆனால், அப்படிப்பட்ட பெருத்த விஷயத்தில் தாமே முன்னுக்குப் போய் விழுவது கெளரவக் குறைவான காரியம் என்ற எண்ணமும் உண்டாயிற்று. அவ்வாறு அவர்கள் எவ்வித முடிவிற்கும் வரமாட்டாமல் தவித்துத் தயங்கி இருந்த சமயத்தில் ஒரு வேலைக்காரன் உள்ளே நுழைந்து ஒரு கடிதத்தை நீட்டினான். அப்போது கற்பகவல்லியம்மாள் ஸ்நான அறையில் இருந்தமையால் பூஞ்சோலையம்மாள், கோகிலாம்பாள் ஆகிய இருவருமே தனியாக இருந்தனர். கடிதத்தை மிகுந்த ஆவலோடு வாங்கிய பூஞ்சோலையம்மாள் வேலைக்காரனை வெளியில் அனுப்பிவிட்டுக் கடிதத்தைக் கோகிலாம்பாளிடத்தில் கொடுக்க, அந்த மடந்தை அதை வாங்கிப் பிரித்துப் படிக்கலானாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: