பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 163

ஆங்காங்கு நட்சத்திரக் கூட்டங்களைப் போலக் காணப்பட்ட ஜடை பின்னல்களை ஜீலீர் ஜிலீரென்று ஒளிக்கற்றையை அள்ளி வீசியதையும் அந்த ஊஞ்சற் பலகை மெதுவாக ஆடிக் கொண்டிருந்ததையும் கண்ட கண்ணபிரான், அந்த இன்ப வடிவம் உயிருள்ள வடிவம் என்றே நிச்சயித்துக் கொண்டான். அந்த வழவழகியின் பின்புறத்தை மாத்திரம் கண்ணபிரான் கண் டான். ஆனாலும், அவள் பூஞ்சோலையம்மாளது பெண்கள் இருவருள் ஒருத்தியே என்பதை மாத்திரம் அவன் சந்தேகமற உணர்ந்து கொண்டான். ஆனால், அவள், தனக்கு மனையாட்டி ஆகப்போகும் கோகிலாம்பாளோ, அல்லது செளந்தரவல்லியோ என்பதை அவன் நிச்சயிக்கக் கூடாமல் இருந்தது. அந்தப் பூங்காவின் மற்ற எல்லாப் பாகங்களைக் காட்டிலும் அந்த இடம் மகா சிரேஷ்டமாகவும், மனோகரமாகவும் இருப்பது பற்றி அந்தப் பெண்கள் அவ்விடத்தையே அதிகமாக விரும்பி வந்து சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவார்களோ என்ற எண்ணம் தோன்றியது. அப்படிப்பட்ட பிரத்தியேகமான இடத்தில் தான் வந்ததைப் பற்றி, அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற அச்சமும், அந்த யெளவனப் புருஷனது மனதில் எழுந்தது. அந்தப் பெண்ணழகி தனியளாக இருந்த இடத்தில் தான் வந்ததை அவள் உணர்ந்தால், தன்னைப் பற்றி தவறான அபிப்பிராயத்தையும், அருவருப்பையும் கொள்வாளோ என்ற அச்சம் அவனது கால்களைப் பின்னிற்கு இழுத்தது. அவள் திரும்பிப் பார்ப்பதற்கு முன், தான் ஒசை உண்டாக்காமல் திரும்பி நடந்து அப்பால் போய்விட வேண்டும் என்ற நினைவும் பரபரப்பும் அவனுக்கு உண்டாயினவாயினும் பதினாயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் தெவிட்டாத சுவையும், இன்பமும், எழிலும் திரண்டு தேஜோமயமாக வீற்றிருந்த அந்த மோகனாங்கினியின் மேல் சென்று லயித்திருந்த தனது பார்வையை எடுக்கவும், அவ்விடத்தை விட்டுப் போகவும், அவனது மனம் இடந்தரவில்லை. ஆகையால், அவன் தேன் குடித்த நரிபோல மதிமயங்கி உணர்வு கலங்கிப் பாகாயுருகி அசைவற்று மூச்சு விடாமல் கற்சிலைபோல நின்று அவளது சிகை முதல் நகம் வரையிலுள்ள ஒவ்வோர் அங்கத்திலும் தனது பார்வையைச் செலுத்தி தனது விழிகள் இரண்டிற்கும் தேவாமிருத விருந்து செய்து கொண்டிருந்தான்.