பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

செளந்தர கோகிலம்



விசனமும் சகிக்க முடியாத அவமானமும் மனவேதனையும் ஏற்பட்டிருக்கும் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. நான், திரிகரண சுத்தியாக, இந்தக் குற்றத்தையாவது வேறே எந்தக் குற்றத்தையாவது செய்தவனல்ல. ஆகையால் பரமதயாளுவும் மகா நீதிவானுமாகிய கடவுள் என்னை அநியாயமாகத் தண்டிக்கமாட்டார் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆகையால், உனக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள இந்த அவமானத் தையும், துயரத்தையும் ஈசுவரன் அதிசீக்கிரத்தில் நிவர்த்திசெய்து, நாம் இருவரும் ஆநந்தம் அடையும்படி சேர்த்து வைப்பார் என்பதை நீ நிச்சயமாக நம்பலாம்.

கடவுள் பரம தயாநிதி. ஆகையால், அவருடைய மக்களாகிய நாம் அநியாயமாக வருந்துவதை அவர் பார்த்துக்கொண்டு அசட்டையாக இருக்காமல், எப்படியும் ஒரு வழி காட்டி உதவுவார் என்பது என்னுடைய விஷயத்தில் மெய்யாகி விட்டது. நான் இருக்கும் இந்த நிராதரவான நிலைமையில், ஒரு முக்கியமான அதிகாரியின் அநுதாபமும், உதவியும் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. நான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதை அவர் சந்தேகமறத் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆகையால், அவருக்கு என் விஷயத்தில் இப்படிப்பட்ட பெருத்த தயாளமும், இரக்கமும் உண்டாகி இருக்கின்றன. உடனே ஒரு வக்கீலை அமர்த்தி, என் பொருட்டு மாஜிஸ்திரேட்டினிடத்தில் போய் வாதாடச் செய்தால், என்னை ஜாமீனின் மேல் இப்போது விடுவித்துக் கொண்டு போகலாம் என்றும், பிறகு இந்த வழக்கின் விசாரணை நடக்கும்போது, தக்க ஆதாரங் களைக் காட்டி, சாட்சியங்களை விடுத்து, விடுதலை பெறலாம் என்றும், மேற்படி அதிகாரி யோசனை சொல்கிறார். அது எனக்கும் யுக்தமாகவே தோன்றுகிறது; நான் இந்தத் திருட்டு விஷயமாக உன் மனம் திருப்தி அடையும்படி சில சமாதானங் களை நேரில் சொல்லிக்கொள்ள வேண்டியிருப்பதாலும், வக்கீல் விஷயமாக ஆக வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் சொல்ல வேண்டியிருப்பதாலும், நான் இருக்கும் இடத்திற்கு நீயே நேரில் வரும்படியான சிரமத்தை உனக்குக் கொடுக்கலாம் என்று துணிந்து இந்தக் கடிதத்தை அனுப்பலானேன். நீ இங்கே வருகிறாய் என்பதைப் பிறர் அறிந்து கொண்டால், அதனால்