பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

செளந்தர கோகிலம்



அதுகாறும் கள் சாராயம் முதலிய நாட்டுச் சரக்குகளை மாத்திரம் குடித்திருந்தான். சீமைச்சரக்கான பிராந்தி முதலியவைகளை ஒரு நாளைக்காகிலும் ருசி பார்க்க வேண்டுமென்று நெடுநாளாக ஆவல் கொண்டிருந்தவன் ஆகையால், அந்த இளைய ஜெமீந்தாரது கையில் இருந்த சீமை மதுவின் மீது அவனது நாட்டமும் மனதும் சென்றன. அவன் தனது நோவையும் கவனியாமல், கோபத்தையும் மூட்டையாகக் கட்டித் தூரத்தில் வைத்து விட்டு சந்தோஷமும் புன்னகையும் கொண்ட முகத்தினனாய் அவரை நோக்கி, “அந்தப் புட்டி என்ன விலை சாமீ?" என்றான். அப்போதே அவனது நாக்கில் நீர் ஊறியது. அவன் உஸ் உஸ்ஸென்று இழுத்துக் கொண்டான். அந்தக் குறிப்பை அறிந்த இளைய ஜெமீந்தார் நிரம்பவும் அன்பாகப் பேசத் தொடங்கி, "இது முழு புட்டி; இதிலிருப்பது எக்ஷா நெம்பர் 1. இதன் விலை ரூபா 3. இதில் கொஞ்சம் உள்ளுக்குச் சாப்பிட்டால் உன்னுடைய உடம்பு நோவு கீவெல்லாம் ஒரு நிமிஷத்தில் பறந்து போகும். இந்தப் புட்டியை நீயே எடுத்துக் கொள்' என்று கூறியவண்ணம், அதை நீட்ட, அவன் மிகுந்த சந்தோஷமும் குதூகலமும் அடைந்தவனாய், அந்தப் பிராந்திப் புட்டியை ஏற்று அதன் மூடியைத் திறந்து, அதற்குள்ளிருந்த மதுவையெல்லாம் ஒரே மூச்சாக வாங்கித் தனது வயிற்றிற்குள் செலுத்திவிட்டான். அவ்வளவு பெருத்த புட்டி நிறைய இருந்த பிராந்தியின் வீரியத்தையும் போதையையும் அவன் எப்படித் தாங்கப் போகிறான் என்ற வியப்பும் அச்சமும் பிரமிப்பும் அடைந்த இளைய ஜெமீந்தார் அவனை நோக்கிக் கலகலவென நகைத்து, "பலே பேஷ்! நீ மகா கெட்டிக்காரன் உன்னுடைய திறமை எவனுக்கும் வராது. ஒரு முழுப்புட்டி பிராந்தியையும் ஒரே மூச்சில் சாப்பிட்ட மனிதனை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை' என்றார். அதற்குள் மினியனது கண்கள் கோவைப் பழமாகச் சிவந்து போயின. மயக்கமும் போதையும் மேலிட்டு அவனை அசைத்து ஆகாயத்தில் கிளப்பிக் கொண்டு போகத் தலைப்பட்டன. அவன் ஆனந்த பரவசமடைந்து அளவிறந்த வெறி கொண்டு தாளம் போட்டுக் கைகால்களை எல்லாம் ஆட்டி ஆட்டிப் பாடத் தொடங்கி அவரை நோக்கி, 'மவராசா நான் அந்தக் கள்ளு சாராயத்தை எல்லாம் கொடங்கொடமாகக் குடிச்சி அதிலேயே முளுகிக் கெடக்