பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும் 43

அப்படிப்பட்ட லக்ஷாதிபதியின் செல்வியைக் கண்டு தான் நெடுமூச்செறிவது நிஷ்பிரயோசனம் என்றும், அவ்வாறு தான் தன் மனதைச் சபலிக்கவிடுவது தீரா விசனமாக முடியும் என்றும், அவனது நல்ல அறிவு அவனுக்கு அடிக்கடி புத்தி கூறியது. என்றாலும், முதன் முதலாக காதல்கொள்ளும் யெளவனப் பருவத்து மனமானது தான் காதலிக்கும் வஸ்து தனக்குக் கிடைக்குமா, அதற்கும் தனக்கும் பொருத்தமுண்டா, தான் அதைக் காதலிப்பது தகுமா என்ற விஷயங்களையெல்லாம் உணரமாட்டாமல், விரகவேதனைக்கே அடிமையாகிவிடும் என்பது நல்லார்க்கும் பொல்லார்க்கும் எல்லார்க்கும் ஒத்த நிகழ்ச்சி. ஆதலால் நமது யெளவன குமாஸ்தா தடுக்க முடியாவகையில், அவனது இருதய கமலத்தில் கோகிலாம்பாள் என்னும் கோதிலக் குணமுடைய மங்கை கோவில் கொண்டு வீற்றிருந்தாள்.

அவனது நிலைமை அப்படி இருக்க, செளந்தரவல்லியின் மனமோ பலவகையான சஞ்சலங்களினால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. தான் எந்த வார்த்தை சொன்னாலும், அதில் ஒன்றையேனும் கோகிலாம்பாள் ஒப்புக் கொள்ளாமல் அதற்கு மாறாகவே காரியங்களைச் செய்கிறாள் என்றும், அதனால் தன்னிடத்தில் பிறர்க்கு மதிப்புக் குறைவும் சிறுமையும் ஏற்படுகின்றனவே என்றும் நினைப்பவள்போல, செளந்தர வல்லியின் தேகம் அடிக்கடி குன்றிப்போனதாகக் காணப்பட்டது. அது நிற்க, அன்றைய தினம் தாம் கண்டவர்களுள் கோவிந்தபுரம் ஜெமீந்தார் அதிக அழகான மனிதரா, அல்லது. அந்த யெளவன குமாஸ்தா அதிக அழகுடையவனா என்ற சந்தேகமே பெருத்த சந்தேகமாக எழுந்து அவளது உணர்வையும் நினைவையும் அடியோடு கொள்ளை கொண்டு விட்டது. அந்த முக்கியமான ஆராய்ச்சியில் அவள் முற்றிலும் ஆழ்ந்துபோய்த் தமக்குக் கடற்கரையில் நிகழ்ந்த அபாயத்தின் நினைவையே கொள்ளா தவளாக மெய்ம்மறந்திருந்தாள். ஆனால், கோகிலாம்பாளின் மனது எவ்விதமான உணர்ச்சியைக் கொண்டது என்பதைப் பிறர் அறிந்து கொள்ளக்கூடாதபடி அவள் தனது இயற்கையான சலனமற்ற தோற்றத்தைக் கொண்டவளாகவே காணப்பட்டாள்.