பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 செளந்தர கோகிலம் வருஷத்திலும் நடக்காதபடி அவ்வளவு புதுமையான அலங்காரங்களோடு அதிக விமரிசையாய் இந்த வருஷம் திருவிழா நடக்கப் போகிறதாம். ரிஷபவாகனத் திருவிழாவும், தேரும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்குமென்று எல்லா ஜனங்களும் அதே பேச்சாகப் பேசிக் கொள்ளுகிறார்கள். முதல்தரமான வாத்தியக்காரர்கள் வந்திருக்கிறார். இப்போது முதலே ஊர் தேவேந்திர லோகம்போல விளங்குகிறது. எங்குப் பார்த்தாலும் குதூகலமும் சந்தோஷமுமே மயமாகக் காணப் படுகின்றன. இப்போது முதலே புதிய புதிய கடைகளும், இராட்டினங்களும், இன்னும் பலவிதமான வேடிக்கைகளும் வந்து வந்து ஊரெங்கும் நிறைந்து போயிருக்கின்றன. ஆறு நிறையத் தண்ணிர் போனாலும், நாய் நக்கித்தான் குடிக்க வேண்டுமென்பது போல, நான் ஒருவனே துர்ப்பாக்கிய வானாய்த் துயரமென்ற பெரிய பேய்க்கு அடிமையாய் இருந்துவருகிறேன். நீ ஒரு பெரிய சமஸ்தானத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவன். உன்னை நான் இந்தத் திருவிழாவைக் கருதி அழைப்பது ஒழுங்கல்ல. செளபாக்கியவதி காந்திமதியம்மாளையும், குழந்தையையும் பதினைந்து தினங்களுக்கு நீ இவ்விடம் அனுப்பி வைத்தால் நான் மறுபடி உயிர் பெற்று இன்னம் கொஞ்சகாலம் இந்த மண்ணுலகத்தில் இருப்பேன் என்று நம்புகிறேன். இடையில் நீ இரண்டு மூன்று தினங்களுக்காவது மகாராஜனுடைய அநுமதி பெற்றுக் கொண்டு எப்படியாவது இங்கே வந்து உன் முகத்தை எனக்குக் காட்டிவிட்டுப் போனால், என் மனம் குளிரும். என் உடம்பும் உயிரும் தளிர்த்துப் புத்துயிர் பெறும். ஏதோ கிழவன் பைத்தியம் பிடித்து உளறுகிறான் என்று நினைத்து அசட்டையாக இருப்பாயோ என்னவோ! நீ சற்புத்திரன் என்று உன்னை எல்லோரும் புகழுவதாக நான் கேள்வியுற்றேன். அதை இப்போது நான் காரியத்தில் பார்க்கவேண்டும். என்னுடைய தவசிப்பிள்ளையாகிய இராமலிங்கத்தை நான் நாளைய மெயில் வண்டியில் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கிறேன். இந்தக் கடிதம் உன்னிடம் வந்து சேரும் தினத்திற்கு மறுநாள் அவன் அங்கே வந்து சேருவான். அதற்கு