பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 229 சென்று அதன் முதல் கணவாய்க்குள் நுழைந்தான். நுழையவே, அடுத்த நிமிஷத்தில், அதற்குப் பக்கத்திலிருந்த இரண்டாவது கனவாய் மறைவிலிருந்த ஒரு மனிதன் அவ்விடத்தை விட்டு விரைவாக நடந்து முதற் கணவாய்க்குள் வந்து நமது காசாரியை நோக்கிப் புன்னகைசெய்து அன்பாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, 'யாரப்பா நீ? உன் பெயர் மினியனா? புரசைப்பாக்கம் துபாஷ் ராஜரத்ன முதலியாருடைய மூத்த மகளைப் பெட்டி வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயல்லவா?” என்று வினவினான். அதைக் கேட்ட மினியன் மிகுந்த ஆச்சரியமும் ஆவலும் அடைந்து அவனை உற்று நோக்கினான். அந்த மனிதருக்குச் சுமார் நாற்பது வயதிருக்கலாம். அவன் சாதாரணமாய்ப் பெரிய மனிதர்களின் வீடுகளில் வேலைசெய்யும் சம்பளக்காரன் போல, ஏழ்மை நிலைமையில் காணப்பட்டான். அவன் தன்னை அறிந்து கொண்டு கோகிலாம்பாளைப் பற்றி விசாரித்தமையால் அவன் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாருடைய வேலையாளா கத்தான் இருக்க வேண்டுமென்றும், அவரால் அனுப்பப்பட்டு வந்திருக்க வேண்டுமென்றும் மினியன் உடனே யூகித்துக் கொண்டான். ஆயினும், அவனது மனம் பலவகைப்பட்ட சந்தேகங்களைக் கொண்டது. தான் பாலத்தடியில் மறைந்திருந் தால் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தார் ரஸ்தாவோடு வந்து கோகிலாம்பாளிடம் பேசி உண்மையைக் கிரகிப்பதாகத் தன்னிடம் கூறினாரேயன்றி தமது ஆளைப் பாலத்தடியில் ஒளித்து வைத்திருப்பதாகக் கூறவில்லை. ஆதலால், தான் எதிர்பாரா வகையில் அந்த மனிதன் வந்து தன்னிடம் கேள்வி கேட்டது மினியனுக்கு மிகுந்த வியப்பையும் கவலையையும் உண்டாக்கியது. ஆகவே விஷயம் இன்னதென்பதை அறிய ஆவல் கொண்ட மினியன் அந்த மனிதனை ஏற இறங்கப் பார்த்து, "என்னெ நீ அடையாளம் கண்டுக்கினெ; நீ ஆருங்கறது தெரியலியெ. ஒன்னெ ஆரு அனுப்பிச்சது?’ என்றான். உடனே அந்த மனிதன், 'நான் பேசுவதிலிருந்து என்னை யார் அனுப்பியிருப்பார்களென்பது உனக்குத் தெரியவில்லையா. கோவிந்தபுரம் சின்ன ஜெமீந்தார் ஐயா என்னை இங்கே அனுப்பினார்கள். நான் அவர்களுடைய வேலைக்காரன்.