பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 செளந்தர கோகிலம் சொல்வது சரியல்ல, எலி கூடாரத்தைக் கடித்துவிடப் போகிறது என்று, அதைப் பிடிக்க எலிப்பாஷாணம் வாங்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதைச் சர்க்கரையென்று நினைத்து நான் தவறுதலாகச் சாப்பிட்டு விட்டேனென்றும் சொல்லிவிடுவோம். நான் தங்களுக்குப் பாஷாணம் கொடுக்க எத்தனித்ததையாவது, தங்கள் சம்சாரம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையாவது நாம் வெளியிட வேண்டாம்” என்று கூறி வாய்மூடு முன், ஆயுர்வேத வைத்தியர் விரைவாக அவ்விடத் திற்கு வந்து, “எஜமானே! என்ன விசேஷம்! யாருக்கு உடம்பு சரிப்படவில்லை?” என்று பணிவாக வினவினார். உடனே திவான், 'ஐயா! வைத்தியரே, நம்முடைய முத்துசாமி எப்படியோ தவறுதலாகப் பாஷாணத்தைச் சாப்பிட்டு விட்டானாம். அது இவனைச் சகிக்கமுடியாதபடி உடத்திரவப்படுத்துகிறதாம். உம்மிடம் பாஷாணத்தை முறிக்கக் கூடிய மாற்று மருந்து நல்லதாக இருந்தால், உடனே கொடுத்து இவனுக்கு ஆகவேண்டிய சிகிச்சைகளைச் செய்து இவன் பிழைக்கும்படியான வழியைத் தேடும்” என்றார். அவ்விதம் அவர் முடிக்குமுன் முத்துசாமி மயங்கி வேரற்ற மரம் சாய்வது போலத் தரையில் சாய்ந்து விட்டான். அவ்வாறு சாய்ந்தவனுக்கு வாந்தி பேதி முதலியவை பிரமாதமாக ஆரம்பமாயின. உடம்பிலிருந்த நீர் முழுதும் வெளியில் வந்து விட்டதோடு இரத்தமும் பெருகி வெளிப்பட ஆரம்பித்தது. பங்குனி சித்திரை மாதத்து ஆற்று மணலின்மேல் கிடந்து புழுக்கள் துடிப்பதுபோல அவன் கீழே கிடந்து புரண்டு புரண்டு கைகால்களை முறுக்கிக்கொண்டு, "ஐயோ! அப்பா!' என்று முக்கி முனகி மரணாவஸ்தைப் படுபவன்போலக் கிடந்து தத்தளிக்கலானான். உடனே ஆயுர்வேத வைத்தியர் அவனது கைகளைப் பிடித்து நாடியைப் பரீட்சை செய்து பார்த்துவிட்டு, பக்கத்திலிருந்த வேலைக்காரர்களை அழைத்து, முத்துசாமியை அவ்விடத்திலிருந்து தூக்கிக்கொண்டு தமது வைத்திய அறைக்குச் சென்று அவ்விடத்தில் அவனை வசதியான ஒரு கட்டிலின் மீது படுக்கவைக்கச் செய்து, விஷத்தை மாற்றத்தக்க சிறந்த ஒளஷதங்களை உடனே எடுத்து உள்ளுக்குப் பிரயோகம் செய்ததன்றி, அவனது உடம்பையும் பிளானலினால் மூடி