பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 253 தீர்ந்துபோகும். பிறகு நாலாயிரம் ரூபாய் மிஞ்சும். ஆயிரம் ரூபாய்க்கு உன் சம்சாரத்துக்கு நகைகள் செய்து போடு. ஆயிரம் ரூபாயைக் கலியாணச் செலவுக்கு வைத்துக்கொள். மிகுதி இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் கூட முதல் வைக்காவிட்டால், அது ஒரு வியாபாரத்தில் சேர்ந்ததாகாது. ஆகையால், நான் எல்லா விஷயங்களையும் யோசனைசெய்தே இந்தத் தொகையை எடுத்துக் கட்டிவைத்தேன். நோட்டுகளை மேஜையில் வைக்காதே. எடுத்துக்கொள்; எடுத்துக்கொள்' என்று அன்பாக வற்புறுத்திக் கூறினார். கந்தனுக்குத் தான் கண்டது கனவோ நனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அவன் தனது செவிகளையே நம்பாமல் பிரமிப்பும் மயக்கமும் அடைந்து இரண்டொரு நிமிஷ நேரம் ஸ்தம்பித்துப்போய் அப்படியே ஊமைபோல நின்று விட்டான். தாங்கவொண்ணாத அமிதமான ஆநந்தத்தினால் அவனது மனம் பூரித்துப் பொங்கி எழுந்தது. அந்த அமிதமான எழுச்சியினால் அவனது இருதயம் வெடித்துப் போய்விடுமோவென அஞ்சத்தக்க நிலைமை ஏற்பட்டது. அவன் முற்றிலும் மெய்ம்மறந்து பரவசமடைந்து திவானினது கால்பக்கத்தில் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கி, "மகாப் பிரபுவே! காருண்ய வள்ளலே! கருணைக் கடலே! பேசுந் தெய்வமே! நானும் இதுவரையில் எத்தனையோ புண்ணிய ஆத்மாக்களைப் பார்த்திருக்கிறேன்! இப்பேர்ப்பட்ட பெருந் தன்மையும் ஜீவகாருண்யமும் தயாளமும் வாய்ந்த உத்தமகுண புருஷரை நான் பார்த்ததே இல்லை. எஜமானே! எனக்கு எதற்காக இவ்வளவு பெரிய ஐசுவரியம்! என்னைப் போன்றவர்கள் எல்லோரும் உழைத்து பாடுபட்டுத் தங்களைப் போன்ற புண்ணியாத்துமாக்களுக்கெல்லாம் குற்றேவல் செய்யப் பிறந்த வர்களாயிற்றே. நாய்க்கு வால் அளந்து வைக்கப்பட்டிருக் கிறதென்று சொல்லுகிறபடி ஈசுவரன் ஒவ்வொருவனையும் அவனுடைய யோக்கியதைக்குத் தகுந்த நிலைமையில் தானே வைத்திருக்கிறான். எங்களைப் போன்றவர்களுக்குத் திடீரென்று அபாரமான செல்வம் வந்துவிடுமானால், உடனே செருக்கும், திமிரும், தான் என்கிற ஆணவமும் உண்டாவதோடு நல்லவர் பெரியவர்களைப் பணியவேண்டுமென்ற சிரேஷ்ட குணமே இல்லாமல் போய்விடுமே! நாலு காசு அகப்பட்டு விட்டால்,