பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 செளந்தர கோகிலம் முனுசீப்பா! அப்படியானால் என்னோடு சீக்கிரமாக வாருங்கள் இன்னும் சில மனிதரையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் கையில் தடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மனிதரைப் புலி தூக்கிக்கொண்டு போகிறது. ஒருவேளை அவர் இன்னம் உயிரோடு இருக்கலாம்" என்றார். . அந்த விபரீதச் செய்தியைக் கேட்கவே, கிராம முனுசீப்பும் இன்னும் அங்கிருந்த மற்றவர்களும் உடனே வீட்டிற்குள் ஒடி ஆளுக்கு ஒரு தடியாகக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிவந்து, சாமியார் ஐயா! வாருங்கள் போவோம்! இடத்தைக் காட்டுங்கள்” என்று கூறிய வண்ணம் புறப்பட ஆயத்தமாயினர். உடனே திவான் அவர்களெல்லோரையும் தம்மோடு அழைத்துக் கொண்டு ஒட்டமும் நடையுமாகச் சென்று பத்து நிமிஷ நேரத்தில், தாம் மோட்டார் வண்டியைப் பள்ளத்தில் தள்ளி விட்ட இடத்தையடைந்தார். அவ்வாறு எல்லோரும் ஒடிய காலத்தில் கிராம முனுசீப்பும் மற்றவர்களும் திவானை நோக்கிப் பற்பல கேள்விகளைக் கேட்டனர். ஆனாலும், தாம் ஒடிய ஒட்டத்தில் தமக்குப் பிரமாதமான இரைப்பும் தோன்றிவிட்டது போல அவர் நடித்துத் தமது கைகளின் ஜாடையினால் எல்லா விவரத்தையும் தாம் அந்த இடத்தில் போய்த் தெரிவிப்பதாகக் காட்டியவண்ணம் ஓடிவந்தார். அந்த இடத்தை அடைந்த உடனே கிராம முனுசீப்பும் மற்றவர்களும் பக்கத்திலிருந்த பள்ளத்தைப் பார்த்தனர். அதற்கு அடியில் தாறுமாறாய் விழுந்து கிடந்த மோட்டார் வண்டி அவர்களது திருஷ்டியில் படவே, எல்லோரும் பதறிப்போய் தடதடவென்று கீழே இறங்கி மோட்டாரண்டை போய்ச் சேர்ந்தனர். திவான் சாமியாரும் அவர்களுடன் கூடவே தொடர்ந்து கீழே சென்று. கிராம முனிசீப்பை நோக்கி, "ஐயா! இந்தக் கொடுமையை என்ன வென்று நான் சொல்லுவேன்! நான் இந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். இந்த மோட்டார் வண்டியை ஒட்டிக் கொண்டு ஒரு மனிதர் இந்தப் பக்கமாய் வந்துகொண்டிருந்தார். வந்த வேகத்தில் மோட்டார் வண்டி ரஸ்தாவை விட்டுக் கொஞ்சம் பக்கமாக விலகிவிட்டது போலிருக்கிறது. அடுத்த நிமிஷம் வண்டி தடதடவென்று கீழே இறங்கித் தலைகுப்புறக் கவிழ்ந்து உருண்டு புரண்டு அடிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.