பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - செளந்தர கோகிலம் இடத்திற்கருகில் போய்ச்சேர்ந்து, கீழே குனிந்து வண்டிச் சுவடுகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான். அவ்விடத்தில் தாறுமாறாகவும், குறுக்கு நெடுக்காகவும், ஒன்றன்மேல் ஒன்றாகவும் ஏராளமான வண்டிச்சுவடுகள் பதிந்து கிடந்தன. ஆதலால், அவைகளிலிருந்து முருகேசன் எவ்வித முடிவிற்கும் வரமாட்டாதவனாய்ச் சிறிது நேரம் தயங்கிக் கலங்கி அவ்விடத்திலேயே நின்றான். கோகிலாம்பாள் ஏதோ அவசர காரியமாய்ப் போகிறாள் என்பதை மாத்திரம், அவன் தெரிந்து கொண்டிருந்தானேயன்றி, இன்ன இடத்திற்குப் போகவேண்டு மென்ற கருத்துடன் அவள் புறப்பட்டு வந்தாள் என்பதை அவன் தெரிந்து கொண்டவனன்று. தனக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்தவனான கோவிந்தசாமி எந்த ரஸ்தாவின் வழியாக வண்டியை ஒட்டச் சொன்னானோ, அந்த வழியாகவே முருகேசன் அதை ஒட்டிக் கொண்டு வந்தவனாதலால், அவர்கள் இன்ன வேலைக்காக, இன்னாரிடம் போயிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாத நிலைமையில் இருந்தான். ஆதலால், அவன் அதற்குமேல் அவர்களைத் தேடிப்பிடிப்பது சாத்தியமற்ற காரியமென்றும், தான் வீண்காலதாமதம் செய்வதைவிட, உடனே பங்களாவிற்குப் போய், நிகழ்ந்த விஷயத்தையெல்லாம் பெரிய எஜமானியம்மாளிடம் சொல்வதே சரியான காரியமென்று தீர்மானித்துக் கொண்டவனாய், உடனே அவ்விடத்தை விட்டுப் புரசைப்பாக்கத்தை நோக்கி நிரம்பவும் அவசரமாக நடக்கத் தொடங்கி அரை நாழிகை சாவகாசத்தில் ராஜரத்ன முதலியாரது பங்களாவிற்கு வந்து சேர்ந்தான். அவன் சிறிதும் உழைப்பின்றி எப்போதும் வண்டியிலேயே போய் மெலுக்காக இருந்திருந்து பழகிய பட்டணத்து வண்டிக்காரன் ஆதலால், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தங்கசாலைத் தெருவிற்கு ஒடி ஒன்றேகால் மைல் நீளமுள்ள அந்தத் தெருவின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு இரண்டு மூன்று தரம் ஒடியலைந்து மறுபடி போலீஸ் ஸ்டேஷனை அடைந்து அங்கிருந்து புரசைப்பாக்கம் பங்களாவிற்கு வந்ததனால் அவன் முற்றிலும் தளர்ந்து சோர்ந்து தவிக்கலானான். அவனது உடம்பு வியர்த்து வெலவெலத்துப் போயிற்று. கால்கள் தள்ளாடி அங்கு