பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ 51 கோகிலாம்பாளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போன விஷயத்தை முருகேசன் முதலிய எவரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையினால், அவன் அவ்வாறு பொய்யான தகவலைச் சொல்லியிருப்பானோ என்ற சந்தேகம் உதித்தது. ஆனாலும், போலிஸ் ஜெவானால் இடையூறு நேர்ந்திராவிடில் முருகேசன் வண்டியிலேயே போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் சென்று வெளியில் காத்திருக்கையில், அது போலீஸ் ஸ்டேஷன் என்பதை அவன் எப்படியும் தெரிந்து கொண்டிருப்பான். ஆதலால், அந்தத் தகவல் முருகேசனுக்குத் தெரியக் கூடாது என்ற கருத்தோடு, அந்த மனிதன் அதை மறைத்துப் பொய்யான இடத்தைக் காட்டியிருப்பானென்று நினைப்பதும் தகுதியற்றதாகத் தோன்றியது. முருகேசன் தாங்கள் சென்ற போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது யுக்தமல்லவென்ற எண்ணம் அந்த மனிதனுக்கு இருந்திருக்குமாயின், 'நீ இந்த ஜெவானோடு போய் சப் இன்ஸ்பெக்டரிடம் உன் பெயரைப் பதிவு செய்துவிட்டு, பங்களாவுக்குத் திரும்பிப்போய்விடு. நீ எங்களைத் தேடிக்கொண்டு வரவேண்டாம்” என்று சொல்வதே ஒழுங்கான நடவடிக்கை. தாங்கள் இன்ன இடத்திற்குப் போகிறோமென்பது ஆனைகவுணி போலீஸ் ஜெவானுக்குத் தெரியக்கூடாதென்று அந்த மனிதன் ஒருவேளை பொய்யான தகவல் கொடுத்திருப்பானோவென்று சந்தேகிக்கவும் இடமில்லா திருந்தது. ஏனெனில், அந்த ஜெவானுக்குத் தெரியாமல், அந்த மனிதன் முருகேசனைத் தனிமையில் சிறிதுதுாரம் அப்பால் அழைத்துப்போய் உண்மையான தகவலை அவனிடம் கூறியிருக்கலாம் அல்லவா? ஆகவே, அந்த மனிதன் என்ன எண்ணத்தினால் அவ்வாறு பொய்யான தகவலைச் சொல்லி யிருப்பான் என்பதைப்பற்றி பூஞ்சோலையம்மாள் பலவாறு சந்தேகமுற்றாள். ஆனாலும், மற்றபடி கோகிலாம்பாளுக்கு அதனால் பெருத்த பொல்லாங்கு எதுவும் நேருமென்று அந்த அம்மாள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், அந்த மடந்தை இரண்டொரு நாழிகை காலத்தில் எப்படியும் திரும்பி வந்துசேருவாள் என்ற முடிவான எண்ணத்தோடு புஷ்பாவதி இருந்த இடத்தை அடைந்தாள்.