பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி காணா இரவோ மழை காணா இளம்பயிரோ! 73 அவனது மனம் ஆநந்தபரவசம் அடைந்தது ஆயினும் தனது ஆருயிர்க் காதலியான கோகிலாம்பாள் எங்கே இருக்கிறாளோ, என்ன நிலைமையில் இருக்கிறாளோ என்ற குழப்பத்திலும் கவலையிலும் அவன் தனது சொந்த நினைவை அடியோடு விலக்கிவிட்டான். அப்போது வக்கீல், "சரி, பெண் அகப்பட்ட உடனே இங்கே செய்தி சொல்லியனுப்புவார்கள். மறுபடி ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டர் இங்கே வந்து ஏதாவது தந்திரம் செய்யப்போகிறார். ஜாக்கிரதையாக நடந்து கொள்ளும்' என்று கூறிய பின் பூஞ்சோலையம்மாளை அழைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு வெளியில் சென்று வண்டியண்டைப் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தவர் பூஞ்சோலையம்மாளை நோக்கி, 'அம்மா! நீங்கள் இப்போது உங்களுடைய ஜாகைக்குத்தானே போகிறீர்கள்? எனக்கு நேரமாகிறது. நான் இப்படியே வீட்டுக்குப் போகிறேன். நாளைய தினம் காலையில் சரியாக 11-மணிக்கு நீங்கள் மாஜிஸ்டிரேட்டின் கச்சேரிக்கு வந்து சேருங்கள். நாம் மேல் காரியங்களை அங்கே செய்துகொள்ளுவோம்’ என்றார். அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் மிகுந்த கலக்கமும் மனக்குழப்பமும் அடைந்து, 'ஐயா என்னுடைய பெண்ணைக் கண்டுபிடிக்காமல் நான் எப்படி என்னுடைய பங்களாவிற்குத் திரும்பிப் போவேன்! நானோ பெண்பிள்ளை, இந்த ஊரிலோ திக்குத் திசை தெரியவில்லை. என்னுடைய சொந்தக்காரர்களுக்கு நான் செய்தி சொல்லியனுப்பி அவர்களை வரவழைக்கக்க்ட அவகாசமில்லாமல் போய்விட்டது. இந்தச் சமயத்தில் தாங்களும் இப்படி என்னைக் கைவிட்டுவிட்டுப்போனால், நான் என்ன செய்வேன்! தயவு செய்து தாங்களும் என்னோடு இன்னும் கொஞ்சநேரம் இருந்து எனக்கு உதவி செய்யவேண்டும். தங்களுடைய பொழுது வீணாவதற்காக நான் தங்களுக்குத் தக்கபடி சன்மானம் செய்துவிடுகிறேன். தாங்கள் எப்படியாவது வரத்தான் வேண்டும்' என்று நிரம்பவும் உருக்கமாகவும் பரிதாபகரமாகவும் இறைஞ்சி வேண்டிக்கொண்டாள். அதைக்கேட்ட வக்கீல், 'அம்மா! நான் என்னுடைய பொழுது வீணாய்ப் போகுமே என்று கவலைப்படவில்லை.