பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 செளந்தர கோகிலம் சேரும்படி செய்துகொள்ள வேண்டுமென்று கருதியிருந்தார் என்பது முன்னரே கூறப்பட்ட விஷயம். ஆகவே, முதல் நாளைய இரவில் கண்ணபிரானது அன்னை கற்பகவல்லியம்மாள் தற்கொலை செய்துகொள்ளும் கருத்துடன் அந்தப் பங்களாவை விட்டுப் போய்விட்டாள் என்ற செய்தி அவருக்கு மிகுந்த களிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கியது. தான் கண்ணபிரானைத்தான் மணப்பேனென்று கோகிலாம்பாள் ஒரே உறுதியான எண்ணத்தோடு இருக்கிறாளென்று புஷ்பாவதியின் மூலமாய்க் கேள்வியுற்றார். ஆனாலும், தாம் எவ்வாறாயினும் முயன்று அவளது பிரியத்தைத் தம்மீது திருப்ப வேண்டுமென்று நமது சுந்தரமூர்த்தி முதலியார் தீர்மானம் செய்துகொண்டார். கற்பகவல்லியம்மாள் பங்களாவைவிட்டுப் போனது அவரது எண்ணத்திற்கு நிரம்பவும் அநுகூலமாகத் தோன்றியது. அவர் பல இடங்களிலும் போய்க் கற்பகவல்லியம்மாளைத் தேடிப்பார்த்துக் கண்டு பிடிப்பதாய்ப் போயிருக்கிறாரென்று புஷ்பாவதியம்மாள் பூஞ்சோலையம்மாளிடம் கூறினாள். ஆனாலும், அவர் அவ்வாறு செய்ய உத்தேசிக்கவில்லை. ஏதோ அவசர காரியமாய் நமது கோகிலாம்பாள் தங்கள் சொந்தக்காரரான ஒருவருடைய வீட்டிற்குப் போகிறாளென்பதைப் புஷ்பாவதி சொல்லக் கேட்டார். ஆதலால், அவரது மனத்தில் அது விஷயமாய் எண்ணிறந்த யோசனைகளும் சந்தேகங்களும் தோன்ற ஆரம்பித்தன. எப்போதும் வெளியில் தனிமையில் போயறியாத யெளவனச் சிறுமியான கோகிலாம்பாள் தனியாய்ப் போகிறாள் என்றால் அதில் ஏதோ விசேஷமிருக்க வேண்டுமென்று அவர் உடனே யூகித்துக் கொண்டார். அந்த விஷயம் இன்னது என்பதையும், அங்கே இருப்பவர் யாவர் என்பதையும், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன விதமான உறவு முறைமை என்பதையும், தாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற தடுக்கவொண்ணாத ஆவல் அவரது மனத்தில் எழுந்து அவரை ஊக்கத்தொடங்கியது. ஆகவே, கோகிலாம்பாளுக்குத் தெரியாமல், தாம் தமது மோட்டார் வண்டியை அவளது பெட்டி வண்டிக்குப்பின்னால் சிறிது தூரத்தில் விடுத்துக் கொண்டே பின்தொடர்ந்து சென்று தமது சந்தேகங்களை