பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதையே போதியோ பித்தனாய் விடுத்தெனை 11

பெறுமானமுடைய சொத்துக்கள் எவருக்குமில்லாமல் சர்க்காரைச் சேர்ந்துவிடுமே என்ற அச்சமும் கிழவருக்கும் மற்றவருக்கும் உண்டாகத் தொடங்கியது. தவசிப்பிள்ளை தங்களுக்குக் கிடைக்காது என்பதைக் கண்டு அதற்கு ஒரு யுக்தி தேட ஆரம்பித்தார். அவருடைய மகள் கமலவல்லி என்பவள் நல்ல ரூபவதி. அவள் பதின்மூன்றாவது வயசிலேயே பெரிய மனுவியாகி இருந்தாள். அவளைத் தாம் மெதுவாகக் கிழவருக்குக் கட்டி விட்டால், தெய்வாதுகூலத்தால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து விடுமானால், எல்லாச் சொத்தும் அதைச் சேர்ந்துவிடுமென்றும், குழந்தை பிறக்காவிட்டாலும், தம்முடைய பெண்ணும் தாமும் எல்லாச் சொத்தையும் தம்முடைய பிரியப்படி செலவிடலாமென்றும் நினைத்த தவசிப் பிள்ளையும் அவருடைய சம்சாரமும் தம்முடைய பெண்ணுக்கு இரவு பகல் போதனை செய்து, அதன் புத்தியைத் திருப்பி, கிழவரைக் கட்டிக்கொள்வதற்கு அவள் சம்மதிக்கும்படிச் செய்து விட்டதன்றி, அந்தப் பெண் எப்போதும் அவருடன் கூடவே இருந்து, அவருக்கு ஆகவேண்டிய பணிவிடைகளையெல்லாம் செய்யும்படியும் அமர்த்திவிட்டனர். அந்தப் பெண்ணின் பிரியத்தையும் பணிவையும் உழைப்பையும் கண்ட கிழவருக்கு அவளிடத்தில் ஒருவித வாஞ்சையும் பாசமும் ஏற்பட்டுப் போயின. திவான் இறந்து இரண்டு மாசகாலம் ஆவதற்கு முன் தவசிப்பிள்ளையும் அவருடைய குடும்பத்தாரும் காட்டிய பிரியத்தினாலும் செய்த உபசரணைகளினாலும் கிழவருக்குத் தாம் இழந்த மனிதர்களைப் பற்றிய நினைவே அவ்வளவாக மனசில் உறைக்காமல் போயிற்று. இரவு பகல் தமக்கெதிரிலேயே இருந்து இன்பமயமாக விளங்கிய அந்த அழகிய பெண்ணின் மேலேயே அவருடைய கவனம் செல்ல ஆரம்பித்தது. அவருக்கு எந்தக் காரியம் ஆகவேண்டுமானாலும், அது கமலவல்வி இல்லா விட்டால் முடியாது. ஒரு நிமிஷம் கமலவல்லி எங்கேயாவது போய்விட்டால், அவருக்கு இருக்கை கொள்ளாது. அடிக்கடி அவர் கமலவல்லி கமலவல்லியென்று எதற்காகவாவது கூப்பிட்டுக்கொண்டே இருப்பார். அந்தப் பெண் அவரை அதற்குமுன் தாத்தா, தாத்தாவென்று கூப்பிட்டுக்கொண்டே இருக்கும். ஒரு நாள் அந்தப் பெண் அவரைப் பார்த்து, “தாத்தா!