பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 133

திவான் சாமியார், “ஆம், ஐயா! ஆயிரம் ரூபாய் பணத்தைக் கையில் வைத்திருந்த நீங்கள் உங்கள் ஊரில் செளக்கியமாய் இராமல், பரதேசிகளோடு கண்டவிடத்தில் ஏன் தங்கினீர்கள்? அது உங்களுடைய தவறுதானே? நீங்கள் காஷாயம் வாங்கிக் கொண்ட பரதேசியாகவும் தோன்றவில்லை. அப்படி இருக்க, நீங்கள் ஊரோடு நிலையாய் ஏன் இருக்கவில்லை?” என்றார்.

கிழவன் : சுவாமிகளே! அந்த வயிற்றெரிச்சலை நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! நான் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதனைப் போலக் காணப்பட்ட போதிலும் நான் உண்மையில் மனிதனேயல்ல! என்னுடைய வரலாற்றை நீங்கள் கேட்டால் இப்பேர்ப்பட்ட மகா பாவியோடு நாமேன் பேசினோமென்றும், இவனுக்கு நாமேன் உதவி செய்தோம் என்றும் நினைத்து உங்களையே தூவித்துக் கொள்வீர்கள். நான் இறந்தவரிலும் சேராமல் இருப்பவரிலும் சேராமல் நடைப் பிணமாய் இருந்து வருகிறேன். நாய் நரி காக்கை கழுகு பூச்சி புழுக்கள்கூட எங்கள் ஊரில் இருக்க அனுமதியுண்டு. நான் எவரும் செய்யாத பெருத்த பாவத்தைச் செய்தவன். ஆகையால், எங்கள் ஊரார் என்னை ஊருக்குள் சேர்க்கவே மாட்டார்கள். நான் உள்ளே போனால், என்னை எவராவது கல்லால் அடித்துக் கொன்றுவிடுவார்கள்.

திவான் சாமியார் : என்ன ஆச்சரியம் ஐயா இது ஜனங்கள் அப்படி விபரீதமாய் நடந்துகொள்ளும்படியான எந்தப் பாவத்தை நீங்கள் செய்துவிட்டீர்கள்?

கிழவன் : என் மனசார ஒரு பாவத்தையும் அறியேன். நான் எவர் விஷயத்திலும் அற்பமான தவறும் செய்யவில்லை. நான் இன்ன பாவந்தான் செய்தேனென்று சொல்ல எனக்கே தெரிய வில்லை. ஆனால் எங்கள் ஊர் ஜனங்களுக்கு நான் அப்பேர்ப் பட்ட கொடும் பாவியாகி விட்டேன்.

திவான் சாமியார் : என்ன ஆச்சரியம் ஐயா இது! நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சமும் விளங்கவில்லையே! நம் முன்னோர் மனிதர் இன்னின்ன காரியம் செய்தால் அது பாவம் என்று கண்டு அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் அப்படிப்பட்ட காரியம் எதையும் செய்யாதிருந்தால், ஜனங்கள் உங்களைப் பாவியென்று ஏன் மதிக்கிறார்கள்?