பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 153

தாமாகவே காவிரியாற்றிற்குச் சென்று நீராடி வேஷ்டி துவைத்து தமது நியமநிஷ்டைகளை முடித்துக் கொண்டு கோவிலைப் பிரதகதினம் செய்து சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு விட்டுக்கு வரத் தொடங்கி விட்டார். வந்த பொழுது எண்பது, தொண்ணுறு வயது மதிக்கத்தக்க குடு குடு கிழவராகக் காணப் பட்ட குஞ்சிதபாத முதலியாரது வயது பதினைந்து தினங்களில் சுமார் அறுபதுக்கு மேல் இராதென்று எல்லோரும் எண்ணும்படி அத்யாச்சரியகரமாக மாறிப் போயிற்று. அன்னியர் போலக் காணப்பட்ட ஒரு சாமியார் தம்மை, அடிக்கடி, “அப்பா அப்பா’, வென்று கணிகரமாகவும் பணிவாகவும் அழைத்ததையும், தமது புத்திரன் தம்மிடம் எவ்வளவு பயபக்தி வாஞ்சையோடு நடந்து கொள்வானோ அதைவிடப் பன்மடங்கு சிரேஷ்டமாக நடந்து கொண்டதையும் உணர உணர, அவரது தேகமும் மனதும் ஆனந்த பரவசமடைந்து பூரித்துப் போயின. அவர் அடிக்கடி தமது குமாரரையும், மற்ற மனிதர்களையும் நினைந்துருகிக் கண்ணிர் விடுத்து அழுதார். ஆனாலும், திவான் சாமியாரது உத்கிருஷ்டமான நடத்தைகள் அவருக்குத் தேவாமிருத அபிஷேகம் போல பரம சுகமாகவும், அவரது துயரத்தை வெகு சீக்கிரத்தில் விலக்குவனவாகவும் இருந்தன.

அவ்வாறு தமது தந்தை நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்ததைக் காண்பது திவானுக்குப் பரம சந்தோஷமா யிருந்தது. தமது தந்தை வேலைக்காரர்களை அடக்கியாளும் நிலைமைக்கு வந்துவிட்டார் என்பதைக் கண்ட திவான், தாம் அதற்குமேல் அவ்வாறு வீணில் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பது ஒழுங்கல்லவென்று தீர்மானித்துக் கொண்டு, கிழவருடைய புகைப்படம் பிடித்து அதில் சுமார் பதினைந்து பிரதிகள் தயாரித்துத் தமது கைவசத்தில் பத்திரப்படுத்திக் கொண்டு, அவரிடம் தாம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் யாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, தாம் திருவடமருதூர் முதலிய ஊர்களுக்குப் போய் விட்டு இரண்டொரு தினங்களில் திரும்பிவந்து சேருவதாகக் கூறித் தமது தந்தையினிடம் அநுமதி பெற்றுக்கொண்டு ஒருநாள் அதிகாலையில் திருவையாற்றைவிட்டுப் புறப்பட்டு அன்றைய தினம் பிற்பகலில் திருவிடமருதூருக்குப் போய்ச் சேர்ந்தார்.