பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 செளந்தர கோகிலம்

அவர் கூறிய வார்த்தைகள் அத்தியந்த வாஞ்சையும் உருக்கமும் நிறைந்து, நிரம்பவும் கனிவாக இருந்தமையால், அந்த ஸ்திரீயின் மனம் அவற்றால் முற்றிலும் வசீகரிக்கப்பட்டுப் போயிற்று. சீமை இலந்தைப் பழத்தை அந்த ஸ்திரீ அதற்கு முன் கண்ணாலும் பார்த்தவளன்று. ஆதலால், அவை தமக்கு வேண்டா மென்று மறுக்க அவளது மனம் இடந்தராமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற வேட்கையையும் ஆவலையும் அடைந்தது. ஆயினும் அந்த ஸ்திரீ தனது கண்ணியத்தை இழக்க மனமற்றவளாய், ‘சுவாமிகளே! ஏன் இத்தனை பழங்களை எடுத்து வைக்கிறீர்கள்? உங்களைப் போன்ற பரதேசிகளுக்கு எங்களைப் போன்றவர்கள் கொடுத்து உபசரிப்பதுபோக, உங்களிடமிருந்து நான் வாங்கிக் கொள்ளுகிறதா? சுவாமிகளே! இத்தனை பழங்கள் வேண்டாம், உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரியமான வசனத்தைக் கருதி நான் ஒரே ஒரு பழம் எடுத்துக் கொள்ளுகிறேன். எனக்குப் பிள்ளையா குட்டியா, ஒருவருமில்லை. நானும் என் புருஷரும்தான் இந்த வீட்டு மகா ஜனங்கள். என் புருஷர் ஊருக்குப் போயிருக்கிறார்; திரும்பி வர நாலைந்து தினங்கள் பிடிக்கும். இத்தனை பழங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்’ என்று கூறிய வண்ணம் பழமிருந்த இடத்தண்டை வந்து ஒரே ஒரு பழத்தை எடுத்துக் கொள்ள எத்தனித்தாள்.

உடனே திவான் சாமியார் அன்பாகவும் நயமாகவும் வற்புறுத்திக் கூறி, “இல்லையம்மா! நான் ஏராளமாகத் தின்று விட்டேன். எனக்கு வேண்டாம். நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். வெளியில் தோல் பெரிதாக இருக்கிறதேயொழிய தோலைப் போக்கினால் உள்ளே ஒன்றுமிராது. ஒருவர் ஒரு காலத்தில் பதினைந்து பழங்கள் சாப்பிடலாம். எடுத்து உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வாருங்கள்’ என்று கூறினார்.

அவரது வசீகரமான சொற்களை அதற்குமேலும் மறுக்க வல்லமையற்றவளாய் அந்த மாது உடனே குனிந்து பழங்கள் அனைத்தையும் எடுத்துத் தனது மடியில் வைத்துக் கட்டிக் கொண்டபடி அவரிடம் முன்னிலும் அதிக அன்பாகவும் குழைவாகவும் வார்த்தையாடத் தலைப்பட்டாள்.