பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை கலெக்டர் தங்கமணி நாடார் 2O3

போகவே, அவன் வாயைத் திறந்து பேசுவதற்கும் கூடாமல் போய்விட்டது. பெரிய ஆசனத்தின்மீது உட்கார்ந்து கொண்டிருந்த கலெக்டரை அவன் நிமிர்ந்து பார்த்தான். அவர் மற்ற சாதாரண மனிதரைப் போல இருந்ததைக் காணவே, அவனது நிலைமை சிறிது கட்டிலடங்கத் தக்கதாக மாறியது. அதுவுமன்றி, தங்கள் ஊர் மிராசுதார்கள் அங்கு ஒரு புறத்தில் ஒன்றாக நின்று கொண்டிருந்ததைக் காணவே அவனது உயிர் மீண்டது. அவன் ஒருவாறு தைரியமடைந்து குனிந்து கலெக்டரை நோக்கி ஒரு கும்பிடு போட்டான். உடனே கலெக்டர் அவனைப் பார்த்து நிரம்பவும் அன்பாகவும், சுயமாகவும் பேசத்தொடங்கி, “உன் பெயர் காத்தானா?” என்றார்.

காத்தான் : ஆமாஞ்சாமீ!

கலெக்டர் : திருவடமருதூரில் சுடுகாடு காக்கிறது உன் வேலையா?

காத்தான் : ஆம்போ.

கலெக்டர் : இதோ நிற்கிறார்களே. இவர்கள் எல்லோரும் உன்னுடைய ஊர் மனிதர்கள்தானா? இவர்கள் உனக்குத் தெரிந்தவர்கள் தானா?

காத்தான் : ஆம்போ. ஆம்போ. எல்லாரும் எங்க ஆரு ஆண்டமாருங்கதான். எல்லாரும் எனக்குத் தெரிஞ்சவங்கதானுங்க.

கலெக்டர் ; நீ இப்போது இங்கே என்ன காரியமாக

வந்திருக்கிறாய் என்பதை இவர்களிடத்திலாவது, வேறே யாரிடத்திலாவது நீ கேட்டுத் தெரிந்து கொண்டாயா?

காத்தான் : கேட்டேனுங்க. யாரும் சொல்லலிங்க.

கலெக்டர் : இவர்கள் எல்லோரும் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதையாவது நீ கேட்டுத் தெரிந்து கொண்டாயா?

காத்தான் : இல்லிங்க எசமானே! அம்பிட்டுப் பெரிய தனம் எனக்கு ஆவுமா மவராசா அவங்கள்லாம் பெரிய பெரிய ஆண்டமாருங்க. அவுங்களையா அந்த மாதிரி கேள்வி கேக்கறதுங்க. தொரைங்களுக்குத் தெரியாத சங்கதியா - என்றான்.