பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 செளந்தர கோகிலம்

விட்டுப் புறப்பட்டுப் போயிருப்பதாகச் சொன்னார்கள். புஷ்பாவதியம்மாளையாவது கண்டு விவரம் என்ன என்பதை நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத்து அந்த அம்மாள் எங்கே என்று கேட்டேன். அந்த அம்மாள் அதற்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் டெலிபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்களாம். டெலிபோனைவிட்டு வந்த வுடனே, அந்த அம்மாளுக்கு உடம்பில் ஏதோ சங்கடம் ஏற்பட்டுப் போய்விட்டதாம்; உடனே அவர்கள் போய்ப் படுத்துக் கொண்டார்களாம்; தாமே எழுந்து வருகிற வரையில் தம்மை யாரும் எழுப்ப வேண்டா மென்றும், தாம் படுத்து நித்திரை செய்து தாமாக எழுந்தால்தான் உடம்பு சரிப்பட்டு வரும் போல் இருக்கிறதென்றும் சொல்லிவிட்டுப் படுத்தார்களாம். அந்த அம்மாள் இன்னம் எழுந்திருக்கவில்லை. டெலிபோனில் யார் என்ன சங்கதி சொன்னார்களோ தெரியவில்லை, அது ஏதாவது விபரீதச் சங்கதியாக இருக்க வேண்டுமென்று வேலைக்காரர்கள் சொன்னார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்” என்றாள்.

அதைக் கேட்ட கோகிலாம்பாளின் மனத்தில் ஒரு யோசனை தோன்றியது. தனக்குச் சிப்பாயிகளால் நேரிட்ட அபாயத்தைப் பற்றிய வரலாறு எதையும் புஷ்பாவதி சிப்பந்திகளிடம் வெளி யிடவில்லை. ஆதலால், தானும் அதை அப்பொழுது அவர்களுக் கெதிரில் வெளியிடாமல், பிற்பாடு செளந்தரவல்லிக்கும் தனது தாய்க்கும் மாத்திரம் தனிமையில் வெளியிடலாமென்றும், அந்தச் செய்தி வேறு யார் மூலமாகிலும் பின்னர் சிப்பந்திகளுக்குத் தெரிந்தாலும், அதனால் கெடுதல் இல்லையென்றும் நினைத்துக் கொண்டாள். அதுவுமன்றி, தான் சிப்பாயிகளிடத்தில் அகப் பட்டுக்கொண்ட அபாய சங்கதியைக் கேட்டதனால் உண்டான மன அதிர்ச்சியைத் தாங்க மாட்டாமல் புஷ்பாவதி அயர்ந்து தளர்ந்து படுத்துவிட்டாள் என்றும் கோகிலாம்பாள் எண்ணிக் கொண்டவளாய் செளந்தரவல்லியை நோக்கி, “ஒகோ! அப்படியா சங்கதி! அப்படியானால் புஷ்பாவதியம்மாள் யாரிடத்திலும் எந்தச் சங்கதியையும் வெளியிடவில்லையா? அம்மாள் இப்போதுதான் திரும்பி வந்ததாகச் சொன்னாயே. அம்மாள் கூடப் புஷ்பாவதியம்மாளிடம் பேச சந்தர்ப்பம் ஏற்பட்டிராது போலிருக்கிறது” என்றாள்.