பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O செளந்தர கோகிலம்

வேறே மனிதராயிருந்தால், உங்களுடைய சம்பந்தம் உதவாதென்று நினைத்துக் கொண்டு பேசாமல் போயிருப்பார்கள். எங்களுடைய குணம் அப்படிப்பட்டதல்ல. பழகப் பழகப் பாசம் அதிகரிப்பது தான் உத்தமமான சிநேகிதர்களுடைய லக்ஷணம். யானைக்கும் அடிசறுக்குவது உலக இயல்பு. அப்படி இருக்க, ஒரு மனிதருக்கு ஏதோ வேளை பிசகினால் ஒர் அபாயம் நேரிட்டுவிட்டால், அதைக்கொண்டு அவர்களை அதோடு வெறுத்து விலக்கி விடுகிற தென்றால், அது அதம குணமுடையவர்கள் செய்கிற காரியம். எங்களுடைய மனசு எப்படிப்பட்டதென்பது இன்னம் போகப் போகத்தான் உங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றாள்.

பூஞ்சோலையம்மாள், “இதுவும் ஈசனருள்தான். அழிப்பவரும் அவரே ஆக்குகிறவரும் அவரே, நாங்கள் இப்படிப்பட்ட பொல்லாங்குகளை அநுபவிக்கையில் எங்களுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் தங்களைப்போன்ற உத்தம நண்பர்களையும் கடவுள் எங்களுக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார். இல்லா விட்டால், எங்களுடைய கதி நிர்க்கதியாகி விடுமல்லவா? கடவுள் பாம்பையும், தேளையும், வியாதிகளையும் சிருஷ்டித்திருக்கிறார்; அவைகளுக்குப் பரிகாரமான மருந்துகளையும் கூடவே சிருஷ்டித்து வைத்திருக்கிறார் அல்லவா. கல்லிற்குள் இருக்கும் தேரைக்கும், முட்டைக்குள் இருக்கும் கருவுக்கும் ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்கிற கடவுள் நம்மைக் காப்பாற்றாமல் விட்டுவிடப் போகிறாராவென்று முன்னே குழந்தைகள் சொன்னது சாதாரண மான சொல்லா?” என்றாள்.

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்...