பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 செளந்தர கோகிலம்

பங்களாவிற்கு வந்து அவரை உதவிக்கு அழைத்து வந்தான் என்று அவர் கூறியதிலிருந்து தான் இன்ஸ்பெக்டருடைய மாளிகைக்குப் போன வரலாறு அவருக்குத் தெரிந்திருக்காது என்ற நினைவும் கோகிலாம்பாளுக்கு மிகுந்த ஆறுதலை உண்டாக்கியது. அந்த இடத்தில் அதிக காலம் தங்கி இராமல் உடனே போய்விட வேண்டுமென்ற ஆவல் எழுந்து அவளைத் தூண்டியது. ஆனாலும், தம்மிடம் அளவற்ற வாஞ்சையும், மதிப்பும் வைத்துள்ளவரும், தமது தங்கையை அனுப்பியுள்ளவரும், கடைசியில் தனது மானத்தையும் உயிரையும் காப்பாற்றிய பேருபகாரியுமான அவரது மனம் புண்படும்படி, தான் தனது இச்சைப்படியே பிடிவாதமாய் நடந்துகொள்வது ஒழுங்கல்ல என்று தீர்மானித்துக்கொண்ட நமது அருங்குண அணங்கு முன்போல வேலைக்காரிகளை நோக்கி மிருதுவாகப் பேசத் தொடங்கி, “எங்கள் சொந்தக்காரர் இரண்டொருவர் வீட்டுக்குப் போய்த் திரும்பி விடும்படி என்னை என் தாயார் அனுப்பினார்கள்; அவர்கள் அங்கெல்லாம் போய் என்னைத் தேடிப் பார்த்து விட்டு, நான் திரும்பி வேறு வழியாகப் பங்களாவுக்கு வந்திருப்பேனென்று நினைத்துக் கொஞ்ச நேரத்தில் பங்களாவுக்கே வந்துவிடுவார்கள். உடனே புஷ்பாவதியம்மாள் விஷயத்தைச் சொன்னால், அவர்களுடைய கவலை நீங்கிப் போகும். ஆகையால், அங்கே இருந்தாவது இங்கே இருந்தாவது ஆளை அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை. தாங்களும், தங்கள் தங்கைச்சியாரும் எங்கள் விஷயத்தில் வைத்திருக்கும் பிரியத்தையும் மதிப்பையும் நான் அறியாதவளல்ல. அதுவுமன்றி, கடைசியாய்த் தாங்கள் இப்போது எனக்குச் செய்த இந்த உதவிக்கு நாங்கள் இந்த உலகத்தையே தங்களுக்குக் கொடுத்தாலும் அது தங்கள் உதவிக்கு ஈடாகாது. நான் காலையில் சாப்பிட்டுவிட்டே வீட்டிலிருந்து புறப்பட்டுப் போனேன். எனக்கு வயிற்றில் பசி இல்லை. ஆனாலும், தங்கள் சொல்லை மீறி நான் நடப்பது சரியல்ல. ஆகையால், நான் கொண்டமட்டும் சாப்பிட்டு இன்னும் இரண்டொரு நாழிகைக் காலம் இவ்விடத்தில் இருந்துவிட்டே போகிறேன்” என்று பணிவாகக் கூறினாள்.