பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 செளந்தர கோகிலம்

அதைக் கேட்ட கோகிலாம்பாள், தாங்கள் பிரஸ்தாபிக்கிற, விஷயம் அற்ப சொற்பமான விஷயமல்ல. நானோ அறியாத சிறியபெண். இதைக்குறித்து நான் ஏதாவது சொல்ல ஆரம்பித் தால் அது ஒரு வேளை தப்பாக முடியும். இப்பேர்ப்பட்ட விஷயங்களையெல்லாம் வீட்டிலுள்ள பெரியவர்கள் பேசி முடிவுசெய்வதே ஒழுங்கான காரியம். அதைப்பற்றியே நான் இந்த விஷயத்தை என் தாயாரிடம் பிரஸ்தாபிக்கும்படிச் சொன்னேன். என்னுடைய மன உணர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமென்று தாங்கள் கேட்கிறீர்கள். என்னுடைய இப்போதைய நிலைமை பரம சங்கடமானதாக இருக்கிறது. என்னுடைய தாயாரிடம் தாங்கள் இதைப்பற்றிக் கேளுங்கள் என்று நான் மறுபடியும் சொன்னாலும், தங்கள் மனம் ஆயாசமடையும் போலிருக்கிறது. நான் என் மன உணர்ச்சியை எடுத்துச்சொல்வதென்றால், அதுவும் தங்களுக்கு அவசியம் வருத்தத்தை உண்டாக்கும். நான் உண்மையைப் பேசவேண்டுமேயன்றி, பொய்யைச் சொல்லித் தங்களை வஞ்சிப்பது பரம பாதகமான செய்கை. ஆகையால் நான் இருதலைக்கொள்ளி எறும்பைப்போல் எந்த வழியிலும் போக மாட்டாமல் தவிக்கிறேன்’ என்று நிரம்பவும் பணிவாகவும், அன்பாகவும், உருக்கமாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் இன்பமும் துன்பமும் அடைந்தவராய், “சரி, எப்படியாவது இருக்கட்டும். உன் மனசிலுள்ளதை நான் உன் தாயார் மூலமாய்க் கேட்டுப் பின்னால் தெரிந்துகொள்வது நிரம்பவும் சிலாக்கியமான வேலை. நான் இதுவரையில் வைத்திருந்த தப்பான எண்ணம் இன்னமும் அநாவசியமாக நீடித்திருந்து என்னை வதைத்துக் கடைசியில் ஏமாற்றத்தில் முடிவதைவிட, இப்போதே அது பயனற்றது என்று நான் கண்டு என்னைத் தேற்றிக்கொள்ள முயற்சிப்பது நல்லதல்லவா? ஆகையால், நீ உன் அந்தரங்கமான நினைவை மறக்காமல் சொல்லிவிடு. ஆனால் அப்படி நீ சொல்வது என் எண்ணத்திற்குப் பிரதிகூலமானதாய் இருக்குமானால் அதனால் நான் உன்னிடம் வைத்திருக்கும் வாஞ்சையும் மதிப்பும் எவ்வளவு குறைந்துபோகுமென்று நீ நினைக்கவே வேண்டாம்.