பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடி குண்டுகள் 183

அழைத்துக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னாயே. கமலவல்லி எப்படி இருந்தாளென்பது உனக்குத் தெரியுமா?’ என்றார்.

தையலம்மை, ‘கமலவல்லியா! நான்கூட ஒரு நடை புதுச்சேரிக்குப் போயிருந்தேனல்லவா. அப்போது நான் பார்த்த வரையில், அவள் கெட்ட வழியில் போனவளாகத் தெரியவில்லை. ஆனால் உயர்ந்த நகைகள் போட்டுக் கொள்வது, அழகழகான புடவைகளையும் ரவிக்கைகளையும் உபயோகப்படுத்துவது, சொந்த மோட்டார் வண்டி வைத்துக் கொண்டு உலாவப் போகிறது முதலிய பைத்தியங்கள் அவளையும் பலமாகப் பிடித்திருந்தன. அந்த மாதிரி அண்ணனும், தங்கையும் பணத்தை அலட்சியமாக வாரிவிட்டு வெகு சீக்கிரத்தில் ஒட்டாண்டியாய் விட்டார்களாம். அதனால்தான் அவர்களுக்கு அந்த ஊரிலும் கொஞ்சம் கடன் ஏற்பட்டுப் போய்விட்டதாம். அதனால் அங்கிருந்து ரகஸியமாகப் புறப்பட்டு வேறே எங்கேயோ போய் விட்டார்களாம்” என்றாள்.

அதைக் கேட்டுக்கொண்ட சாமியார்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு மறுபடி குற்றாலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்து அன்றைய இரவு வண்டியிலேயே புதுச்சேரிக்குப் பிரயாணமாயினர். அவ்வாறு பிரயாணம் செய்த காலத்தில் திவான் சாமியார் தமக்குள் எண்ணமிடலானார். ‘இராமலிங்கத் துக்குக் குஷ்டரோகம் உண்டானதும், அவனுடைய சம்சாரத்துக்குக் கண்கள் அவிந்து போனதும் எவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறி இருக்கின்றன. பையனும் பலவாறாய்க் கெட்டு அலைகிறவனாக இருக்கிறான். இதில் கமலவல்லியொருத்தி மாத்திரம் கெடாமல் இருப்பது நிரம்பவும் அரிய சம்பவந்தான். என் தகப்பனார் செய்யும் சிவபூஜை வீணாய்ப் போகுமா! எங்கள் குலதெய்வமாகிய சிவபெருமான் பரம பக்தராகிய என் தந்தையரின் மனைவிக்குக் கெடுமதியை ஒரு நாளும் கொடுக்க மாட்டான்! இப்போதும் அவள் பரிசுத்தமாகவேதான் இருப்பாள் என்பதற்குத் தடை யில்லை. இப்போது எம்பெருமான் நல்ல செய்திகளையே கொடுத்துக் கொண்டிருப்பது போலவே அவளையும் நான் வெகு சீக்கிரம் கண்டுபிடித்து, என் தந்தையாரிடம் சேர்த்து வைக்கும்படி அவனே அருள்புரிய வேண்டும்” என்று தமக்குத் தாமே எண்ண மிட்டு கடவுளைத் தியானம் செய்தபடி பிரயாணம் செய்தார்.