பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 செளந்தர கோகிலம்

நான் எப்படி இந்த வேதனையைப் பொறுத்திருக்கப் போகிறேன். என்று தமக்குத் தாமே எண்ணமிட்டவராய் செளந்தரவல்லியின் மீது வைத்த விழியை எடுக்காமல் வெகு நேரம் வரையில் இருந்து தம்மை யாராவது கண்டு கொள்ளப் போகிறார்களேயென்ற அச்சத்தினால் தூண்டப்பட்டவராய் அப்பால் சென்று அந்த இரவு முழுதும் இமைகளையே மூடாமல் விரகத் தீயினால் தகிக்கப்பட்டவராய் இருந்து அரும்பாடுபட்டுப் பொழுதைப் போக்கினார்.

பொழுது விடிந்தது. முகூர்த்த லக்னம் காலையிலேயே வந்தது. ஆகையால், ஜனங்களெல்லோரும் விடியற் காலையிலேயே எழுந்து ஸ்நானம் செய்து அழகான உடைகள் தரித்து நன்றாக அலங்கரித்துக்கொண்டு கலியாணத்தை நடத்த ஆயத்தமாயினர். எட்டு ஜதை வாத்தியக்காரர்களும் பல திக்குகளிலுமிருந்து மங்கள கீதம் பாடி அண்டம் செவிடுபடும்படி அபாரமான பெருமுழக்கம் செய்தனர். முதல் நாள் வந்ததைக் காட்டிலும் அன்றைய தினம் இன்னம் அதிகரித்த ஜனக் கும்பல் வந்து கூடிக் கொண்டிருந்தது. பெருத்த மண்டலேசுவரரது சிம்மாசனம் போல பெரிய இரண்டு மணிமண்டபங்களின் கீழ் அமைக்கப் பட்ட உயர்ந்த வெள்ளிப் பீடங்களின் மேல் மணப்பிள்ளைகள் அமர்ந்து மாங்கலிய தாரணத்திற்கு முன் நடக்கவேண்டிய சடங்குகளைச் செய்தனர். பிறகு கலியாணப் பெண்கள் வருவிக்கப்பட, அவர்கள் இருவரும் நான்கு நான்கு தோழிப் பெண்களினிடையில் நாணித் தலைகுனிந்து வந்து அவரவரது மணமகனுக்குப் பக்கத்திலிருந்து ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். அழகிய மணவாளருக்குப் பக்கத்தில் புஷ்பாவதியும், சுந்தரமூர்த்தி முதலியாருக்குப் பக்கத்தில் செளந்தரவல்லியும் அமர்ந்துகொள்ள, ஒவ்வொரு படியண்டையிலும் ஏராளமாகக் கூடியிருந்த புரோகிதர்கள் வேத மந்திரங்களைக் கூறிப் பெரு முழக்கம் செய்து ஹோமம் முதலிய சடங்குகளைச் செய்யத் துவக்கினர். தங்களது மனோரதம் நிறைவேறப் போவதை எதிர்பார்த்து, புது மணமக்கள் நால்வரும் கட்டிலடங்காத மனவெழுச்சியும், பூரிப்பும், பேராவலும், ஆநந்த நிறைவும் கொண்டு மெய்ம்மறந்து பரம வேதனையும், பரம சுகமும் கலந்த புதுமையான மன நிலைமையில் இருந்தனர். அவர்களது