பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியாணக் கோலம் - கிரகப்பிரவேசம் 199

ஹிருதயம் திடுக்கிடுக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. மணப் பிள்ளைகள் இருவரும் ஏராளமான ஜனங்களின் திருஷ்டி தம்மீது வீழ்ந்திருப்பதை உணர்ந்து, தமது பார்வையைத் தம்தம் மணவாட்டிகள் இருந்த திக்கில் திருப்பாமல் வேறு பக்கங்களில் திருப்பிக் கொண்டிருந்தனர். பூர்வாங்கச் சடங்குகள் முடிய கூரைச் சேலைகள், திருமாங்கலியம் முதலியவைகளைத் தங்கத் தட்டில் வைத்துப் புரோகிதர் அவைகளை உயர்த்திப் பஞ்சாதி சொல்லத் தொடங்கினார். வாத்தியக்காரர்கள் அதுவே சமய மென்று தமது முழுத் திறமையையும் புலப்படுத்தி மங்கள கீதம் பாடி தேவ துந்திபி போல முழக்கினர். புரோகிதர்களும் இதர வைதிகர்களும் வேத மந்திரம் ஜெபித்தனர். ஏராளமாகக் கூடியிருந்த சுமங்கலி ஸ்திரீகள் கலியாண வைபோகம் பாடினர். ஆயிரக்கணக்கில் நிறைந்திருந்த ஜனங்கள் யாவரும் சுவர்ண பிம்பங்கள் போல அழகாக வீற்றிருந்த மணமக்களின் மேலும் மணப்பெண்களின் மேலும் வைத்த விழியை வாங்காமல் ஆநந்தமயமாய் நிறைந்து வீற்றிருந்தனர்.

அங்ஙனம் நிலைமை அவ்வாறிருக்க, முதல் நாள் வந்து விட்டுப் போயிருந்த போலீஸ் கமிஷனர் துரை தமது மோட்டார் வண்டியை நிரம்பவும் விசையாக விடுத்துக்கொண்டு வந்து எதிரில் இறங்கினார். இறங்கினவர் சாதாரணமாகப் போய் ஒர் ஆசனத்தில் உட்கார்ந்து கொள்ளாமல், நிரம்பவும் படபடப்பும் ஆவேசமும் காட்டிய தோற்றத்தோடு, “நகருங்கள் நகருங்கள்’ என்று ஓங்கிக் கூவியவண்ணம் ஜனங்களை விலக்கி வழி செய்து கொண்டு அழகிய மணவாள முதலியார் இருந்த இடத்தை நோக்கி விரைந்து வந்தார். திருமாங்கலிய தாரணம் நடக்கப்போகும் நல்ல சமயத்தில், அந்த துரை அவ்வாறு அநாகரிகமாகவும் அகெளரதையாகவும் நடந்து கொண்டதைக் கண்ட விருந்தினர் அந்த துரை குடிவெறியினால் அவ்வாறு தாறுமாறாக நடந்து கொள்ளுகிறாரென்று நினைத்து கோபப் பார்வையாக அவரைப் பார்த்தனர். அழகிய மணவாள முதலியார் போலீஸ் கமிஷனர் ஏன் அவ்வாறு நடந்து கொள்ளுகிறார் என்பதை அறிய மாட்டாமல் திகைப்பும் ஆத்திரமும் அடைந்து அதிருப்தியாக அவரை நோக்கி, “என்ன சமாசாரம், ஏன் எங்கள் மனிதர்களை இப்படி அவமரியாதையாய் நடத்துகிறீர்கள்!” என்று வினவினார்.