பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 செளந்தர கோகிலம்

நாள் புஷ்பாவதி தங்கை என்பதைக் கூடப் பாராமல் அவளிடம் துன்மார்க்கமாக ஆரம்பித்துவிட்டார். அது முதல் அவளுக்கும் இவரிடம் வெறுப்பு. இவருடைய அசாத்தியமான குடிவெறியில் இவர் நேற்று என் தலை மயிரைப் பிடித்து. அப்படியே மேலே தூக்கி பத்து நிமிஷ நேரம் அலாக்காய்ப் பிடித்து என்னை உலுக்கிக் கொண்டே இருந்தார். என் உயிர் துடித்துக் போய் விட்டது. நான் அழுதால் உயிரோடு குழியில் தள்ளிப் புதைத்து விடுவேனென்று பயமுறுத்தி படுத்தாத பாடெல்லாம் படுத்தினார். இனி என்னால் ஒரு நிமிஷ நேரமும் இவரிடம் இருக்க முடியாது. எப்படியாவது தாங்கள் இருவரும் என் மேல் இரக்கங் கொண்டு, நான் அங்கே வர அநுமதி கொடுக்க வேண்டும். அநுமதி கொடுப்பதை, கடிதத்தில் எழுதியனுப்ப வேண்டாம். ஒரு மனிதரை இங்கே அனுப்பி, இவருக்குத் தெரியாமல், என்னைப் பார்க்கும்படிச் செய்யவும். பராமுகமாயிருந்தால் நான் அநியாயமாய் வெகுசீக்கிரம் இவருடைய கையால் மாண்டுபோய் விடுவேன். மற்ற மனிதர் அவஸ்தைப்படுவதைக் காண்பதில் இவருக்குச் சந்தோஷம் அதிகம்; மனிதரைக் கொல்வது கோழி கொக்குகளை அடித்து விருந்து செய்கிற மாதிரி. இல்லாவிட்டால் இவர் வேண்டுமென்றே தம்முடைய மோட்டார் வண்டியைக் கொண்டு போய், அந்தப் பெண்களின் ஸ்ாரட்டில் மோதி அவர்களை அபாயத்திற்குள்ளாக்குவாரா. அம்மாதிரி இவர் செய்துவிட்டு வந்து பரம ஸாதுவைப்போலப் படுக்கையில் படுத்துக் கொண்டார். நான் வழக்கப்படி இவரிடம் பிரியமாயிருப் பதுபோல நடித்து என்ன விசேஷமென்று கேட்டேன். தாம் செய்துவிட்டு வந்த காரியத்தை வெகு சந்தோஷமாக என்னிடம் தெரிவித்ததன்றி, அந்த இரண்டு பெண்களையும் தாம் கெடுத்து விட்டு அவர்களுடைய சொத்து முழுவதையும் அடியோடு அபகரித்து விடவும் தாம் தீர்மானித்திருப்பதாகவும், அதற்கு என்ன தந்திரம் செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் என்னிடம் கூசாமல் சொல்லுகிறார். இவர் ஈவிரக்கமற்ற கொடிய படுபாவி என்பது இன்னொரு விஷயத்திலும் இன்று தெரிந்தது, இவருடைய வேலைக்காரன் துருக்க சாயப்புவைப் போலப் போய் அந்தக் கற்பகவல்லியம்மாளை அவமானப் படுத்தினான் அல்லவா. அதைப் பொறுக்க மாட்டாமல் அந்த அம்மாள் நடு இரவில் பங்களாவை விட்டுப் புறப்பட்டுப் போனாள் அல்லவா.