பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 செளந்தர கோகிலம்

இவர்களுடைய குடும்ப வரலாற்றை நான் வாயால் சொல்வதை விட, அதைப்பற்றி சென்னை துரைத்தனத்தாரால் வெளியிடப் பட்டுள்ள விளம்பரத்தையே படித்துக் காட்டுகிறேன். நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் - என்று கூறி குஞ்சிதபாத முதலியார் மார்படைப்பினால் இறந்து பிழைத்தது, தஞ்சை ஜில்லா கலெக்டர் தங்கமணி நாடாருக்கு அவர் விண்ணப்பம் எழுதியது, அவர் விசாரணை நடத்திய விதம், முடிவில் துரைத்தனத்தார் பிறப்பித்த உத்தரவு, முதலிய விவரங்களடங்கிய விளம்பரத்தை சப் இன்ஸ்பெக்டர் படித்துக் காட்டினார். அதன் மேல் குஞ்சிதபாத முதலியார் வெளிப்படுத்தியிருந்த விளம்பரத்தையும் படித்துக் காட்டினார்.

அந்த வரலாறுகளையெல்லாம் கேட்ட ஜனங்களது நிலைமை கட்டிலடங்காததாய்விட்டது. போலீஸ் கமிஷனர் ஜனங்களை அமைதிப்படுத்த முயன்றதெல்லாம் பயனற்றுப் போய்விட்டது. ஜனங்களது ஆவேசமும் கோபமும் பிரமாதமாகப் பொங்கிப் போகவே, எல்லோரும் சுந்தரமூர்த்தி முதலியாரைத் தாறுமாறாய் தூவிக்கத் தொடங்கினர். ஒருவர், ‘'அடே அண்ணாமலை! என்னடா உனக்கு வந்த கேடு! எந்த ஊர் ஜெமீந்தாரடா நீ? கோவிந்தபுரம் ஜெமீந்தாரா? அன்னக்காவடிப் பட்டி ஜெமீந்தாரா? கெட்ட கேட்டுக்கு ஜரிகைத் தலைப்பாகை கூடவா?’ என்று கூறிப் பின்னாலிருந்து அவரது தலைப் பாகையைத் தட்டிவிட்டார். வேறொருவர் அவரது பூமாலை களைப் பிடித்து இழுத்துப் பிய்த்துத் தூள்தூளாக எறிந்தார். இன்னொருவர் சீக்கிரமாக ஓடி, ஜனங்கள் காலில் போட்டு வந்து ஒரு மூலையில் நூற்றுக் கணக்கில் விட்டு வைத்திருந்த செருப்புகளில் சுமார் இருபது முப்பதை எடுத்து மாலையாகக் கட்டிக்கொண்டு வந்து அவரது கழுத்தில் சாத்தி எச்சிலை முகத்தில் உமிழ்ந்தனர். அதற்குமுன் புஷ்பாவதியை உதைத்த பெண்பிள்ளை எங்கிருந்தோ ஒரு குடத்தில் சாணியைக் கரைத்து எடுத்து வந்து எல்லோரும் பிரமிக்கும்படி தடாலென்று சுந்தரமூர்த்தி முதலியாரது தலையில் கொட்டிவிட்டுத் தனது கையில் ஆயத்தமாகக் கொணர்ந்த விளக்கமாற்றினால், அவரது முகத்தைப் பார்த்து பட்பட்டென்று ஐந்தாறு அடிகள் கொடுத்துவிட்டாள்.