பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 செளந்தர கோகிலம்

முடிவில் கண்ணபிரானுக்கும் கோகிலாம்பாளுக்கும் திங்கள் கிழமையன்று கலியாணம் நிச்சயமாயிருப்பதையும் கேட்ட கற்பகவல்லியம்மாளது நிலைமை உயிரற்ற சவம் யெளவனப் பருவமும் தீர்க்காயுளும் பெற்று எழுந்து உட்கார்ந்து கொண்டதைப் போலாயிற்று. அந்த அம்மாளது தேகமும் உயிரும் அந்த ஒரு நிமிஷத்தில் புத்துயிர் பெற்றுத் தழைத்துச் செழித்து வல்லமையும் வனப்பும் பெற்றன. விசனமே வடி வெடுத்து வந்ததோவெனத் தோன்றிய மகா துக்ககரமான வதனத்தில் சந்தோஷமும் புன்னகையும் அரும்ப ஆரம்பித்தன. மனத்தில் இன்ப வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்கத் தலைப் பட்டது. தேகம் பூரித்து மினுமினுப்பை அடையத் தொடங்கியது. கற்பகவல்லியம்மாள் பூஞ்சோலையம்மாளை நோக்கி, ‘அம்மா! நீங்கள் சொல்வதெல்லாம் கனவில் காண்பது போல் அல்லவா இருக்கிறது! அந்த சுந்தரமூர்த்தி அப்பேர்ப்பட்ட மோசக்கார னென்பது கொஞ்சமும் தெரியாமல் போய்விட்டதே. பார்த்தீர் களா! அவன் என்னென்ன துணிகரமான காரியங்களைச் செய்திருக்கிறான்! அக்கிரமம் அதிக காலம் நீடித்திராது; எப்படியும் கூடிய சீக்கிரம் அழிவில் போய் முடியும் என்பது ஸ்தாபிதமாயிற்று. கடவுளுடைய பாதமே கதியென்று நம்பி இருப்போருக்கு உடனே கைமேல் பலன் கிடைக்காவிட்டாலும் எப்படியும் ஒரு நாளைக்கு அதன் பலன் கிடைத்தே தீரும். உங்கள் குடும்டத்தையும் எங்கள் குடும்பத்தையும் சுந்தரமூர்த்தி ரூபமாக சநியன் வந்து பிடித்துக் கொஞ்ச காலம் ஆட்டி வைத்தான். கடைசியில், நினைக்கும் கேடு தனக்கே வந்து முடிந்தது. முடிவில், அவனுக்குக் கிடைக்க வேண்டிய சர்க்கார் தண்டனை கிடைத்துவிட்டது” என்றாள்.

பூஞ்சோலையம்மாள் கூறிய வரலாறு முழுதையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த டிப்டி கலெக்டரும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும், கற்பகவல்லியம்மாளுக்கும், கண்ணபிரானுக்கும் நேர்ந்த அபாண்டப் பழியைக் கேட்டு மிகுந்த வியப்பும் விசனமும் அடைந்து, முடிவில் அவர்களுக்கு நேரிட்ட வெற்றியையும், மேம்பாட்டையும் கேட்டு அபாரமான களிப்பும் ஆநந்தமும் கொண்டு, அந்த அம்மாளது நற்குணத்தைப் பற்றி வாய் ஒயாது புகழ்ந்து கொண்டாடினர்.