பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செளந்தர கோகிலம்

ஒருவர் மேலொருவர் விழுந்து நெருங்கித் தமக்குத் தாமே உடத்திரவத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் கையில் இரண்டு வயதுக் குழந்தையுடன் நின்ற சுமார் இருபது வயதுள்ள ஒரு ஸ்திரீ “ஐயோ ஐயோ திருடன் திருடன் என் குழந்தையின் கழுத்துச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஒடுகிறான்” என்று திடீரென்று பெருங் கூச்சலிட்டாள். அதைக் கேட்ட ஜனங்கள். ‘விடாதேயுங்கள். ஆளைப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று கூவிய வண்ணம் அந்த ஸ்திரீயிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து வளைத்துக் கொண்டனர். நமது திவான் சாமியார் அந்த ஸ்திரீயின் பக்கத்தில் நின்றார் ஆதலால், அவர் திடுக்கிட்டு நடுநடுங்கி திகில் கொண்டு அப்படியே நின்றுவிட்டார். அவரைத் தவிர இன்னம் நான்கு மனிதர்கள் அந்த ஸ்திரீயைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் திவான் சாமியாரையும் வெளியில் விடாமல், நாற்புறத்திலும் இருந்த மற்ற ஜனங்கள் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராய்ச் சோதனை போட்டு வெளியில் அனுப்பினர். மற்ற எவரிடத்திலும் நகைகள் அகப்படவில்லை. நமது திவான் சாமியாரைப் பிடித்து ஜனங்கள் சோதனை போட்ட காலத்தில், அவரது பழைய அங்கியில் தைக்கப்பட்டிருந்த பைக்குள் குழந்தையின் கழுத்திலிருந்து அறுக்கப்பட்ட தங்கச் சங்கிலியின் ஒரு பாகம் கிடந்து அகப்பட்டுவிட்டது. “இதோ அகப்பட்டான் திருடன் என்று அவர்கள் பெருங்கூச்சலிட்டு நமது திவான் சாமியாரைப் பிடித்துக் கொண்டனர். அங்கு ஆயிரக்கணக்கில் கூடியிருந்த ஜனங்கள் எல்லோரும் சுவாமியைத் தனியாகவிட்டு, நகை திருடிய கள்வனைப் பார்க்க வந்து நெருங்கினர். தாடியும் மீசையும் ஜடையும் காஷாய அங்கியு மாய்ப் பரதேசிக் கோலத்துடன் இருந்த நமது சாமியாரைக் கண்ட மற்ற ஜனங்கள், “இவனா சரட்டை அறுத்தவன் அடெ பாவிப் பயலே உனக்கு சந்நியாசிக் கோலம் எதற்கடா? ஊரார் சொத்தைக் கொள்ளையடிப்பதற்காக இப்படி நீ ஆண் வேஷம் போட்டுக் கொண்டு திரிகிறாய். இழுத்துக்கொண்டு போங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு” என்றனர். வேறு சிலர், “கொடுங்கள் திருட்டு நாய்க்கு நல்ல சாப்பாடு” என்று கூறினர். உடனே சிலர் திவானது விலாப் பக்கத்தில் குத்தத் தொடங்கினார். வேறு சிலர்