பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. செளந்தர கோகிலம்

கூறினாள். அதைக்கேட்ட பூஞ்சோலையம்மாள் அளவற்ற பிரமிப்பும் நடுக்கமும் கொண்டாள். ஆனாலும், கோகிலாம்பாள் அத்தகைய அபாயத்திலிருந்து எவ்விதமான களங்கமுமின்றித் தப்பி வந்ததைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தவளாய் வாய்திறந்து பேசமாட்டாமல் ஸ்தம்பித்து மெளனமாக உட்கார்ந் திருந்தாள். கோகிலாம்பாள் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டரிடம் சென்றதாக புஷ்பாவதி எண்ணி இருந்தவள். ஆதலால், அவளுக்கும் அந்த வரலாறு வியப்பையும் திகைப்பையும் தந்தது. கோகிலாம்பாள் கூறியது உண்மையான வரலாறாக இருக்குமோ அல்லது தான் இருப்பதைக் கருதி அவள் அவ்வாறு பொய் சொல்லுகிறாளோவென்றும், புஷ்பாவதி சந்தேகித்தவளாய், அவர்களை நோக்கி, “என்ன ஆச்சரியம் இது ஜனங்களுக்கு இவ்விதமான அபாயங்கள் நேராமல் தடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்டவர்களான போலீஸ் அதிகாரிகளே இப்படிச் செய்வ தென்றால், இது வேலியே பயிரை அழிக்கிற மாதிரியல்லவா இருக்கிறது. கோகிலா சொல்லும் வரலாற்றைப் பார்த்தால், அந்த இன்ஸ்பெக்டரிடம் கோகிலா தற்செயலாகப் போய் அகப்பட்டுக் கொண்டதாக எண்ண இடமில்லையே. அவர் கோகிலாவை அடைய வேண்டுமென்று எல்லா ஏற்பாடுகளையும் ஆயத்தமாய்ச் செய்து வைத்திருந்ததாகவல்லவா தோன்றுகிறது. சிறைச்சாலை யிலிருக்கும் முதலியார் கடிதத்தில் கோகிலாவை அழைத்திருக் கிறார் என்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அவர் எழுதிய கடிதத்தை இவர்கள் நடுவில் பிரித்துப் பார்த்திருக்க வேண்டு மென்றே எண்ண வேண்டியிருக்கிறது. இவ்வளவு அபாயமும் அந்தக் கடிதத்திலிருந்து உண்டானதாகத்தான் தோன்றுகிறது. என்ன இருந்தாலும், அவர் இந்த மாதிரிக் கடிதம் எழுதியது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர் நன்றாகப் படித்த புத்திசாலி. அப்படி இருந்தும் கொஞ்சமும் முன்பின் யோசியாமல் கடிதம் எழுதிவிட்டதாகத் தெரிகிறது. வீட்டில் வேறே பெரியவர்கள் இல்லையா? அவருடைய தாயார் இல்லையா? நீங்கள் இல்லையா? நீங்கள் யாராவது வரவேண்டுமென்று அவர் அழைத்திருக்க லாகாதா? அறியாத சிறு பெண்ணைத்தானா அவர் கூப்பிட வேண்டும்” என்றாள்.