பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை உட்காரப் பனம்பழம் வீழ்ந்தது 75

காரியமன்றி, இதைக் குறித்து மன வருத்தம் பாராட்டுவது விவேகமாகாது. ஆகையால் நீ இதைப்பற்றிக் கவலைப்படாமல் உன் வீட்டுக்குப் போய்ச் சேர். நான் வெகு சீக்கிரம் மறுபடி உன்னைப் பார்க்கிறேன்’ என்று மனப்பூர்வமான வாஞ்சை யோடு உருக்கமாகக் கூறினார்.

அதைக்கேட்ட கந்தசாமி முதலியார் அளவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைந்து, ‘எஜமானே! தங்களுடைய பிரியப் படியே நடந்து கொள்ளுகிறேன். தாங்கள் ஆதியில் எனக்குப் பெருத்த பணத் தொகையைக் கொடுத்த காலத்தில், இந்தப் பணம் மற்றவரைத் தீயவழியில் செல்லத் துரண்டுமென்று, அதனால் எனக்குப் பெருத்த இடர்கள் நேருமென்றும் நான் தங்களிடம் விண்ணப்பம் செய்து கொண்டேன். அதுபோலவே, இப்போது காரியம் நடந்துவிட்டது. ஆயினும், இதில் தாங்களே வந்து சம்பந்தப்படுவீர்கள் என்பதையாவது, தங்களை நான் இந்தக் கோலத்தில் காணப்போகிறேன் என்றாவது நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் தங்களிடத்திலிருந்து வந்த பிறகு தாங்கள் சொன்னபடியே பணத்தை விநியோகம் செய்து கலியாணம் செய்துகொண்டு மிகுதியிருந்த இரண்டாயிரம் ரூபாயைப் போட்டு ஒரு சிறிய வெற்றிலைத் தோட்டம் வாங்கினேன். தாங்கள் ஆசீர்வதித்துக் கொடுத்த பணமாகையால் அதனால் வாங்கப்பட்ட தோட்டத்தில், வெற்றிலைக்குப் பதிலாக பவுன்களே பயிராயினவென்று நான் சொல்ல வேண்டும். மற்ற வெற்றிலைத் தோட்டக்காரர்கள் எல்லோரும் என்ன நினைவினாலோ அந்தப் பயிரைப் போடாமல் கரும்பு முதலியவைகளைப் பயிர் செய்யத் தலைப்பட்டுவிட்டார்கள். என்னுடைய தோட்டாமொன்றே வெற்றிலைத் தோட்டமாக இருந்தது. ஆகையால், என் வெற்றிலைக்கு அபரிமிதமான கிராக்கியும் தேவையும் ஏற்பட்டுப் போயின. என்னிடம் ஏராளமான பணம் வந்து குவியத் தொடங்கியது. நான் மேலும் தோட்டம் வாங்கி வாங்கி, வெற்றிலைப் பயிர் செய்து வெகு சீக்கிரத்தில், நான் எப்படி இந்த நிலைமைக்கு வந்தேன் என்பது எனக்கே சில சமயங்களில் சந்தேகமாய் விடுகிறது. தங்கள் கை பட்டதெல்லாம் பொன்னாக மாறியதை நான் அப்போது