பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 * லா. ச. ராமாமிருதம் அந்த முழுநீலத்தினின்று ஒரு சிவப்புப் புள்ளி புறப்பட்டதை அம் மாங்கனி கவனித்தது. கவனிக்கையிலேயே, அதன் குடல் சிலிர்த்தது. மஞ்சள் ஏறிய சிவப்பு அதன்மேல் படர்ந்தது. ஆனாலும், அது அருண ஜாலமாயுமிருக்கலாம். கவனிலிருந்து எறிந்த கல்போல், அந்தச் செம்புள்ளி வான முகட்டிலிருந்து கீழிறங்கி வருகையிலேயே பச்சை, மஞ்சள், வெள்ளை, ஊதா என்ற வர்ணங்கள் அதை ஊடுருவி, கடைசியில் ஐந்து வர்ணங்களும் தோய்ந்த பஞ்சவர்ணக் கிளியாய் மரத்தின்மேல் வந்து அமர்ந்தது. கிளியின் கத்திபோன்ற நீண்ட வால் கீழிலைகளில் இடித்தது. கொடுக்கரிவாளையொத்த தன் மூக்கை இருமுறை தான் அமர்ந்த கிளையில் தீட்டி, தன்னைச் சுற்றி ஒரு முறை நோக்கியது. காலம் வந்துவிட்டது. அது நுழையும் வேகத்தில் காற்று அடித்து, மாங்கனியை மூடிய இலைகள் ஆடின. அதன் மறைவு குலைந்தது. நடுநிசியில், 'நிக்ஹா'வின் முடிவில், வதுக்களி னிடையில் பிடித்த திரை விலகி, மணமகனின் பார்வைக்கு மணமகள் வெளிப்படுவதுபோல் மாங்கனியாள், தன் மன மகனின் திருஷ்டியில் பட்டுவிட்டாள். உள்ளத்தின் கிளர்ச்சியில், இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. கிளி கிறீச்சென்று ஒருமுறை சத்தமிட்டு, இறக்கைகளை விரித்து ஒரு தாவு தாவி, மாங்கனியைத் தாங்கியிருந்த கிளைக்குப் பாய்ந்து அதன் கால்களினிடையிலும் இடுக்கியது. பஞ்சுபோன்ற அதன் மார்பு, பழத்தை அழுத்தியது. தன் சகோதரர்களின் பரிவான கவனத்தைத் தவிர வேறேதும் உணராத அந்தப் பழத்துக்கு இந்தப் பிடியின் பயங்கர இன்பத்தைச் சகிக்க முடியவில்லை. கிளியின் மூக்கு அதை ஒருமுறை இடந்தேடுவதுபோல் வருடியது. அச்சமயம் அதைச்