பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 & லா. ச. ராமாமிருதம் வழக்கம்போல் ஒரு மாலை சந்துரு ஆஸ்பத்திரிக்கு வந்தான். அன்று கிறிஸ்துமஸ் தினம். வார்டைக் கடிதாசுப் பூக்களாலும், நிஜப் புஷ்பங்களாலும், வர்ண விளக்குகளாலும் அலங்கரித்திருந்தார்கள். ஜானா மாத்திரம் கட்டிலில் கழுத்து வரை சிவப்புக் கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள். அவள் கண்களில் அசாதாரண ஒளி வீசிற்று. ஒட இடமிலாது. கடைசியில் ஆள்மேல் திரும்பிவிடும் மிருகத்தின் கண்களில் காணும் வெறி ஒளி, பீதியிலிருந்தே புறப்படும் விரக்தியின் தைரியம். அவன் கண்களில் எழுந்த வினாவைக் கண்டு அவள் சிரித்தாள். "ஒண்ணுமில்லே அண்ணா, இன்னிக்குப் பல் தேய்க் கறப்போ ஏதோ புரையேறினால் போலே இருந்தது. வயத்திலே ஐஸ் வெச்சாப்பிலே சில்லின்னுது கிளுக்குன்னு ரத்தம் கக்கித்து. ஒரு கையகலம் இருக்கும்-” “ஆ! என்னது?” அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டான். "உஷ், ஒண்ணுமில்லே. எனக்கு அதனாலே ஒண்ணு மில்லே. தலைவலிதான் மண்டையைப் பிளக்கிறது. இதை உன்னோடு வெச்சுக்கோ. அம்மாகிட்டே சொல்லாதே. வீணா இடிஞ்சு போயிடுவா. இத்தோடு போச்சு. மறுபடியும் வரணும்னு ரூலா என்ன?” ஆனால் அது மறுநாளும் வந்தது. அதற்கடுத்த நாளும் வந்தது. அடுத்த நாள், அடுத்த நாள்- விடாது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் தவறாமல் ஐந்து மாதங்கள். இத்தனை ரத்தம் கக்கியும் அந்த உடலில் உயிர் இருந்ததுதான் அதிசயம். இன்னும் கக்குவதற்கு ரத்தம் இருந்தது அதைவிட அதிசயம்.