பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் & 203 & சந்துரு ஆபீஸைத் துறந்துவிட்டான். ஸ்திரீகள் வார்டு ஆதலால் மாலை வேளைதான் உள்ளே வரமுடியும். மற்ற வேளைகளில் வார்டு வாசலில் காவல் கிடந்தான். இரவழிந்தது. பகலழிந்தது. சிவப்புக் கம்பளியைக் கழுத்து வரை போர்த்து, கட்டிலில் கிடக்கும் ஜானா, வாசல்படியில் அவன் நின்று கொண்டு, நர்ஸ்களுடைய கோபத்தையும், டாக்டர்களின் சீறலையும் உணராது. அழுக்கேறிய தன் ஆடையை உணராது. குளி மறந்து, உணவு மறந்து, அவளைத் தவிர எல்லாமே மறந்து அவளையே கவனித்துக்கொண்டு நிற்கையில் யார் கஷ்டம் அதிகம் என்று அவளுக்கே சொல்லத் தெரியவில்லை. “யாரு அம்மா? உன் அண்ணாத்தையா? ஐயோ பாவம்! உனக்கோசரம் உயிரையே விட்டுடுவாருபோல இருக்குதே! எங்களுக்கும்தான் கூடப் பொறந்தவங்க இருக்காங்களே!” அன்று முதல் நாள் ரத்தம் வந்ததெனக் க்ேட்டவுடன் துடித்தது தவிர, சந்துரு ஒன்றும் வாய்விட்டு அப்புறம் வேதனைப்பட்டதில்லை. அவளுடன் அதிகம் பேசினதுகூட இல்லை. மாலை வந்ததும் கட்டிலண்டை மெளனமாய், மணியடிக்கும் வரை உட்கார்ந்திருப்பான். அவளும் மார்பில் கோத்த கைகளின்மேல் தாழ்ந்த கண்களுடன் யோசனை பண்ணிக்கொண்டிருப்பாள். ஒரே ஒருநாள் அவன் அவளைக் கேட்டான். ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென்பதற்கோ என்னவோ? “என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?” "இந்த ஜன்மம் இத்தோடு போனப்புறம் அடுத்த ஜன்மத்தில் அல்லது வேறெந்த ஜன்மத்திலும் உன்னோடு கூடப் பிறக்கக்கூடாதுன்னு. உன்னோடு பிறந்து இப்போ படற அவஸ்தை போறும்!” அவன் கண்களில் முதன்முதலாய்த் தண்ணீர் தளும்பிற்று. அதைக் கண்டதும் அவளுக்கு அழுகை வந்துவிட்டது.