பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 : லா. ச. ராமாமிருதம் இருக்கலாம். ஆனால் தமக்கும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் பெருந்துன்பந்தான். இதோ வருஷங்களும் ஒடிவிட்டன. ராமதுரைக்குக் கல்யாணம் நடக்கிறது. ஜானாவின் இஷ்டம் அப்படித்தான். மருமான் கல்யாணத்தைச் சுருக்கப் பார்த்துவிட வேண்டு மென்னும் அவா. எப்படியும் ஒட்டைச் சட்டியாகிவிட்டதால், ராமதுரை வீட்டுக்கு வந்துவிட்ட பிறகு உடல் நலிய ஆரம்பித்து விட்டது. ஆனால் அந்தப் பழைய பயங்கரத்துடன் அல்ல. கொஞ்சங் கொஞ்சமாய் நைந்து ஒடுங்க ஆரம்பித்தது. கொழுக்கட்டை அதில் வெந்தாய் விட்டது. இனி சட்டிக்கு உபயோகமில்லை. கொட்டுமேளம் கொட்டுகிறது. இது எதற்கு? ராமதுரைக்கு மாத்திரமா? சந்துருக்குந்தான். தனக்குந்தான். ஏதோ இன்னும் தனக்குப் புரியாத முறையில் தன் மன்னிக்குந்தான். எல்லோ ருக்கும் இன்று ஒரு புதுக்கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது: வீம்பின் நித்திய கல்யாணம். “கொட்டு கொட்டு, நன்றாய்க் கொட்டு.” "கெட்டிமேளம், கெட்டிமேளம்! மாங்கல்ய தாரணம் நடக்கிறது; கெட்டிமேளம்!” தம்பதி சகிதமாய் ராமதுரை அத்தையை நமஸ்கரிக்க அறைக்குள் நுழைந்தபோது ஜானாவின் கண்கள் விழித்தது விழித்தபடிதான் இருந்தன. அவள் முகத்தில் அன்பும் இன்பமும் அமைதியும் நிறைந்த புன்னகை உறைந்து போயிருந்தது. தீராத் தாகம் தீர்ந்த முகத்தில்தான் அந்த பாவத்தைக் காணமுடியும். பின்னாலேயே சந்துரு வந்து நின்றான். அவன் பின்னால் கெளரி. "அக்கா, என்னை மன்னிச்சுடுங்கோ!”. ஜானாவுக்கு அது கேட்டதோ இல்லையோ, ஜானா தன் சுனை போய்ச் சேர்ந்துவிட்டாள். O