பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜனனி o 21 ஓடிவந்து பார்த்தார்கள். அவன் தூங்கிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒரு புது நிம்மதி. தேகம் வியர்த்து ஜூரம் விட்டிருந்தது. ஐயர் அப்படியே அதிசயித்து நின்றார். ஒரு வாரம் கழித்துக் குழந்தைக்கு ஜலம் விட்டார்கள். குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு ஜனனி விக்கி விக்கி அழுதாள். ஏனென்று அவளுக்கே புரியவில்லை. தாய்க்கும் விஷம் கக்காமலிருக்க முடியவில்லை. "இதென்னடியம்மா கூத்து கொழந்தை சாகல்லையேன்று அழறையா?” ஜனனிக்குப் பூஜையறையில் யாரோ சிரித்தாற் போலிருந்தது. ஒடிப்போய்ப் பார்த்தாள். ஆனால் அங்கே யாரையும் காணவில்லை.

※ ※

ஜனனி மதமதவென வளர்ந்தாள். சீக்கிரமே பக்குவம் அடைந்துவிட்டாள். கறுப்புத்தான். கட்டு உடல். கட்டு மயிர். உறுப்புக்களில் நல்ல முறுக்கு. அதே மாதிரி கோபமும் முறுக்குத்தான். ஒருவருக்கும் அடங்க மாட்டாள். சட்டுச் சட்டென்று கோபம் வரும் வந்த சுருக்கில் தணிந்துவிடும். ‘அடியே இப்படி அடங்காப்பிடாரியாய் இருக்கையே! உன் புக்ககத்துக்குப் போனால், உன் மாமியார் நீ பண்ணற அட்டகாசத்துக்கு உன்னை இடிக்கறது போறாதுன்னு, உன்னை யாருடி வளர்த்தான்னு என் பேரையும் சந்தியில் இழுப்பாடி!” "உன்னை எந்த மாமியார் இப்போ இடிச்சுண்டிருக்கா அம்மா?” “உன் நாக்கைச் சுட்டெரிக்க! என் மாதிரி நாலாவதாய் வாழ்க்கைப்பட்டால், மாமியார் மாத்திரமில்லே, புருஷன் கூட ரொம்ப நாள் தக்கமாட்டாண்டி!”