பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகரெட்டுகள் அந்தியிருட்டில் வெண்மையாய்ச் சிதறின; தீப்பெட்டியில் ஒரே ஒரு குச்சிதான் இருந்தது. சபித்துக் கொண்டு இருமுறைகள் கிழித்தான் இரண்டு பொறிகள்தாம் தெறித்தன. சுடர் உடனே குதிக்கவில்லை. மருந்து கிழிப்ப திலேயே உதிர்ந்துவிட்டது. உள்சுவர் தரைமட்டமாய் இடிந்தது. ஒடிப்போய் ஊரையும் பிடிக்க முடியாது ரயிலடிக்கும் திரும்ப முடியாது. சமதுரத்தில், இரண்டுக்கும் வெகுதூரத்தில் மாட்டிக் கொண்டோம் எனக் கண்டுகொண்டான். விஷம் ஏறிக் கொண்டே வருகிறது. "எங்கேயிருக்கிறோம்”- சுற்றுமுற்றும் நோக்கினான். "எங்கேயிருக்கிறோம்?” “எங்கிருந்து வந்தோம்?” “எதற்காக வந்தோம்?” "எங்கே போகிறோம்?” "இனி வரப்போவது என்ன?” சில சமயங்களில் மனத்தில் ஒரு எண்ணம் எழுந்ததும், சமயமும் சம்பந்தமுமற்று, அதையொட்டி, அதே மனத்தில் வாக்குத் தொடர்கள் எழுகின்றன. எழுந்ததும் அவைகளே எண்ணங்களாகவும் மாறி, தாமே தம்மைத் தனித்தனித் தொடர்புகளுடன் பெருக்கிக்கொண்டு விடுகின்றன. "எங்கிருந்து வந்தாய்?'- திடீரென்று அவனுள்ளிருந்து ஏதோ பிரிந்து, எதிரில் நின்றுகொண்டு, அவன் கேள்வியை அவனையே திருப்பிக் கேட்பதை உணர்ந்தான். உடனே அவனுக்கிஷ்டத்துடனோ, இஷ்டமில்லாமலோ, அக்கேள்விக்குப் பதிலை அவனிடமிருந்து, அது பன்னிப் பன்னிக் கேட்கும் முறையிலேயே கட்டாயப்படுத்திற்று. “எங்கிருந்து வந்தாய்?”