பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தெய்வத்திற்கோ, அல்லது அந்தத் தெய்வத்திற்கும் காரணமாயுள்ள சக்தி எதுவோ அதற்கோ நாம் உதவி புரிந்தவர்கள் ஆவோம். கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின்மேல் நம்முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிர்க்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்துகொண்டே பார்க்க முடியும். இவ்வனுபவம் ஒருவனுடையது மாத்திரமல்ல, ஒவ்வொருவனுடைய உரிமையே ஆகும். ஆகையால் இக்கதைகளில் ஏதோ ஒன்றில் ஏதோ ஒரு பக்கத்திலோ அல்லது ஒரு வாக்கியத்திலோ, சொற்றொடரிலோ, பதங்களிலோ அல்லது இரு பதங்களுக்கிடையில் தொக்கி, உன்னுள்ளேயே நின்றுகொண்டு உன்னைத் தடுக்கும் அணுநேர மெளனத்திலோ உன் உண்மையான தன்மையை நீ அடையாளம் கண்டு கொள்வாய், இறப்புக்கும் பிறப்புக்குமிடையில் நம் எல்லோரையும் ஒன்றாய் முடித்துப் போட்டு, நம் உள் சரடாய் ஒடிக்கொண்டிருக்கும் உண்மையின் தன்மை ஒன்றேதான். ஆகையால், இக்கதைகளில் நான் உன்னையும் என்னையும் பற்றித்தான் எழுது கிறேன். வேறு எப்படியும் எழுத முடியாது. இக் கதைகளைப் படித்ததும் உன்னிடமிருந்து உன் பாராட்டையோ, உன் நன்றியையோ நான் எதிர் பார்க்கவில்லை. உன்னைச் சில இடங்களில் இவைகள் கோபப்படுத்தினால் அக்கோபத்திற்கும் நான் வருத்தப்படப் போவதில்லை. உடன்பிறந்தவர்