பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்று : 73 சம்ரக்ஷணையிலும் கெளரவத்திலும் இருக்கும் பொறுப்பிற்கா, படிப்புக்கா? பையன் என்னவோ ராஜா மாதிரிதான் இருந்தான். ஒற்றை நாடித் தேகம். நெருப்புச் சிவப்பு. நடை, நடையா யிருக்காது ஏதோ காற்றில் மிதப்பது போலத்தான் இருக்கும். அதன் அழகு அவ்வளவு லாகவம். உடை பாவனைகள் எல்லாம் அப்படித்தான். கோவில் குருக்களாய் இருப்பதால், ‘கிராப்பு வைத்துக்கொள்ள முடியவில்லை. மயிரை நீளமாய் வளர்த்து மேல் நோக்கி வாரிவிட்டிருந்தான். கஞ்சிக்கு “லாட்டரியாயிருந்தாலும் நல்ல உடைதான் உடுத்துவான். கண்களின் ஒளி ஊடுருவும். அவனுடைய கத்திப் பார்வைக்குப் பயந்தே அண்டை வீட்டார் எல்லோரும் தங்கள் பெண்டிரை அடைகாத்து வந்தனர். அவன் தெருவழியே போகையில், பெண்கள், வீட்டு ஜன்னல் வழியே ஆசையுடன் திருட்டுப் பார்வை பார்ப்பார்கள். அதுவும் அவனுக்குத் தெரியும்; தெரியாததுபோல், ஒரு அலட்சியப் புன்முறுவலுடன், மிதந்துகொண்டே போவான். இத்தனைக்கும் அவன் அவர்களை நாடிச் சுற்றியதில்லை. ஆனால் ஊரில் மற்றக் காலிகளைவிட அவனிடம்தான் பயந்தார்கள். அவனுக்கும் அவன் சஹாக்களுக்குமே வித்தியாச மிருந்தது. அவர்களுக்கே அவனிடம் ஒரு எல்லைக்கு மேல் நடுக்கந்தான். அவனிடம் ஒரு நெருங்க முடியாத தன்மையும், அடிப்படையான குரூரமும் இருந்தன. ஏதோ கத்தியோடு பழகுவது போல்தான்! அதை எவ்வளவு அன்போடு அணைத்தாலும் அதற்கு வெட்டத்தான் முடியும்; அதன் இயல்பே அதுதான். அவனுக்கு அவனைப்பற்றியே அநாவசியமாய் இருந்தது. அவன் எதற்கும் தயாராய் இருந்தான். அதனால் அவன் மற்றக் காலிகளைவிட அபாயகரமானவனாய் இருந்தான். கருணை என்பதே அவனிடமில்லை.