பக்கம்:ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூர்வ பீடிகை (அமைப்பு முதலிய விவரங்கள்)

3

முதல் முதல் ஆற்காடு என்ற பெயர் பாலாற்றிற்கு பக்கங்களிலுள்ள விசாலமான பிராந்தியங்களுக்கே அளிக்கப்பட்டிருந்ததாம். ஆற்காடு என்ற பதம் வடமொழியில் "ஷடாரணியம்" எனப்படும். ஆறுகாடு ஆற்காடாய்விட்டது. பண்டைக்காலத்தில் பாலாற்றின் இருபக்கங்களிலுமுள்ள பிராந்தியங்கள் ஆறு காடுகள் அடங்கியுள்ளவைகளாக இருந்ததாகவும் அவைகளில் ஆறு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுளது.

இந்த ஜில்லாவின் எந்த கிராமத்தை எடுத்துக்கொண்டாலும், எந்த நதியை எடுத்துக்கொண்டாலும், அதைப்பற்றிய புராண சம்பந்தமான கதை ஏற்பட்டிராமலிராது. ஒன்றின் அருகிலிருந்த ஒரு ரிஷியின் பிரதாபமானது கூறப்பட்டிருக்கும், அல்லது பாண்டவர்களது சம்பந்தமாவது அவ்விடங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ராம, லக்ஷ்மணர்கள் சீதா பிராட்டியைத் தேடித்திரிகையில் வந்து சேர்ந்துள்ளவிடங்களெனச் சில உண்டு. ஒரே விதமான ஸம்பவம் வெவ்வேறிடங்களில் நேர்ந்திருந்ததெப்படியென நிர்ணயிக்க முடியவில்லை. ஆனால் புராணக் கதைகளிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாய் நிர்ணயிக்கப்படுவது ஒவ்வொரு கதையுமே. இப்பொழுது இந்த ஜில்லா ஏற்பட்டிருக்கும் பிராந்தியம் அப்பொழுது காடடர்ந்து ராக்ஷஸர்கள் முதலானோர்கள் வசித்துவந்த விஷயத்தை ஒத்துக்கொண்டு எடுத்துக்கூறியிருக்கிறதுபோலும். அக்காலத்திய காட்டுவாசிகளான அரக்கர்களை தேவர்கள் நாசப்படுத்தினார்கள் என்றதும் ஏற்பட்டிருக்கக் காணலாம்.