பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

பொழிவுகளைக் கேட்டுப் புலமை பெற்றவர்கள் ஆயிரக் கணக்கானவர்கள். அவர்தம் அருள் உரைகளைச் செவி மடுத்து நல்லறமும் நல்லொழுக்கமும் உடையவராய்த் திகழ்ந்தவர்கள் நூறாயிரக் கணக்கானவர்கள்.

 மேலுள்ள பாடல் ஞானியாரின் மாணாக்கர் ஒருவரால் இயற்றப்பட்ட்து. பல்வகை நூல்களைப் பாடம் கேட்கவும், சொற்பொழிவு கேட்கவும், மெய்யுணர்வு - மெய்யறிவு பெறவும் வருபவர்களின் கூட்டம், அடிகளாரின் திருமடம் முழுவதும் இரவு பகல் இன்றி எப்பொழுதும் நிறைந்திருக் கும் - என்பது அப்பாடலின் சுருக்கமான கருத்து.
 தமிழிலும் வடமொழியிலும் மிக்க புலமையும்,தெலுங் கிலும் ஆங்கிலத்திலும் போதிய திறமையும் பெற்றுத் திகழ்ந்தவர் தவத்திரு அடிகளார். கேட்பவர் உள்ளங் களைத் தம்பால் ஈர்த்துப் பிணித்து, நான்கு மணிநேரம் - ஐந்து மணிநேரம் சேர்ந்தாற்போல் தொடர்ந்து சொற் பொழிவாற்றும் பேராற்றல் படைத்தவர் ஞானியார் அடிகளார். பெருந்தலைவர்கள் - பெரும் புலவர்கள் பலரும் அடிகளாரின் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருநீறு பெற்றுப் பெருமையுறுவர். தமிழ்நாடு முழுதும் அன்ப ராயினார் பலர், எங்கள் ஊருக்கு வரவேண்டும் - எங்கள் ஊருக்கு வரவேண்டும் என வேண்டி அன்புடன் அழைத்துச் சென்று சொற்பொழிவாற்றச் செய்து கேட்டு மகிழ்வர். அடிகளாரின் தலைமையில் பேசாத பெரும் புலவர்கள் இல்லை எனலாம். அடிகளார் தலைமை தாங்கிப்பேசாத பெருங்கழகங்களும் இல்லை எனலாம்.
 தவத்திரு ஞானியார் அடிகளார் இட்ட பணிகளை அன்புடன் செய்வதைத் தம் வாழ்நாளில் பெற்ற பெரும் பேறாகக் கருதியோர் பலர். அடிகளார்க்குத் தம் அன்புக் காணிக்கையாகப் பழவகைகளைக் கூடை கூடையாகக்