பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

மனத்தைக் கவர்ந்தன. சிறிதே சிவந்து நிமிர்ந்த உருவம். துவராடை உடுத்த துகள்தீர்மேனி. பருமையும் மெலிவும் இன்றிப் பாங்குற அமைந்த உடல். விரிந்த கொள்கையின் பரந்த நெற்றி. ஆழ்ந்த நோக்குடன் அன்பு ஒழுகு கண்கள். நேர் நிமிர்ந்து முனை வளையாக் கூர் அறிவு காட்டும் கூரிய மூக்கு. தமிழ்ப் புலமை பூக்கும் தனி வாய். எழுத அரியவடிவும் அழகும் இயற்கையிற்பெற்ற இவர் காதில் அசைந்தது குண்டலம். கழுத்தில் தவழ்ந்தது கண்டிகைத் தாவடம். தெய்வ ஒளி வீசும் திருமுகம். இவர் முகத் தோற்றத்தை உற்று நோக்குக. அதில் தோற்றுவது யாது? சங்கத்தமிழின் தீங்களிப்போ சிந்தை சேர்ந்த சிவத்துவ ஒளியோ! அன்பு பழுத்த அகத்தெளிவோ! அறிவுபழுத்து அமைவளமோ! தமிழின் பழுத்த தனியழகோ யாதெனப் புகல்வது! இவை யாவும் திரண்டெழுந்த 'ஞானத்தின் திரு உருவோ' நம் எதிரே தோன்றுவது? கண்டன யாவை யும் வாரி வாரி உண்டனகண்கள்-கொண்டனகளிப்பு"-

  கோதண்டபாணியார் கூறியது இது. அடுத்து மற்றோர் அன்பர் கூறியதையும் காண்போம்:
  'சிவம் பொலிந்து விளங்கும் அடிகளார், அவைக்கண் எழுந்தருளிய அளவிலேயே புன்னகையுடன் கூடி விளங்கும் திருமுக மண்டலமும் திருநீற்றினால் திகழ்ந்து விளங்கும் பரந்த நெற்றியும், மகர குண்டலங்களை மகிழ்வுடன் தாங்கி நிற்கும் திருச் செவிகளும், அனைவரையும் நோக்கி இன்முகம் காட்டும் ஆழ்ந்தொளிரும் அரிய கண்களும், சென்பொன் ஒளிவிட்டு விளங்கும் சிவலிங்க தாரணத்துடன் மிடைந்து விளங்கும் உருத்திராக்கத் தாழ்வடத்தின் தனி யழகும் காண்போர் கண்களைக் கவரும் பெரும் விருந் தெனத் தோன்றும். அடிகளாரின் வருகையைக் கண்டதும், அவையில் குழுமியுள்ள அன்பர்கள் தம் வீண் பேச்சுக்களை