பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

'பண்டிதர்' என்னும் பட்டம் வழங்கப் பெற்றது. சென்னைப் பல்கலைக் கழகம் நடத்திய தமிழ் வித்துவான் தேர்வினும் பண்டிதர் தேர்வு கடினமானது என்று கூறுவது வழக்கம். பற்பலர் பண்டிதப் பட்டம் பெற்றுப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியராய்ப் பணி புரிந்தனர். இவ்வாறாக, புலிசை ஞானியார் அருளகத்தில் தரப்பெற்ற விதை மதுரையில் ஊன்றப்பெற்று முளைத்துச் செழித்து வளர்ந்து பெருமரமாய்ப் பயனளித்துக்கொண்டிருப்பதை அறிந்து - அறிந்து புலிசை ஞானியார் பெருமகிழ்வுற்றார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் தோன்றிய வரலாறு இது. இது தோன்றச் செய்த தந்தை(மூல காரணர்)புலிசை ஞானியார் அடிகளார் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அடிகளாரின் தமிழ்ப் பணிக்கு இது ஒரு பெரிய சான்றாகும்.

புலிசை வாணி விலாச சபை:

 புலிசை அருளகத்தில் ஒரு கழகம் ஏற்படுத்த வேண்டும் என அடிகளார் விரும்பிக்கொண்டிருந்தனர். 1903 ஆம் ஆண்டு (சோபகிருது ஆண்டு) பாண்டித் துரைத்தேவர் மீண்டும் ஒரு முறை புலிசை ஞானியார் அருளகத்திற்கு வருகை புரிந்தார். அவர் தலைமையிலேயே "வாணி விலாச சபை" என்னும் கழகத்தை அடிகளார் நிறுவினார். அடிக ளார் தலைவராகவும், வழக்கறிஞர் குப்புசாமி செட்டியார் செயலாளராகவும் மற்றும் அறிஞர்கள் பலர் உறுப்பினர்களாகவும் அமர்த்தப் பெற்றனர். அருளகத்தில் வாரந் தோறும் சொற்பொழிவுகள் நடந்தன; ஆண்டு விழாக்களும் நடைபெற்று வந்தன.
 அந்தக் காலத்தில் தமிழ் அன்னை ஆங்கில அரக்கனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தாள். ஆங்கிலம் கற்ற அறிவாளிகள் - மா மேதைகள் தமிழில் பேசுவது தாழ்வு என எண்ணம் கொண்டிருந்தனர். தமிழில் பேசவும் தெரியாது.