பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

சமாகக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் திரு.வி.கலியான சுந்தரனாரே இறுதியில் பேசுவார். திரு.வி.க. பேசியதும் நன்றி சொல்வதெனில் கூட்டம் கலைந்துவிடும். அதனால், திரு.வி.க.வின் இறுதிப் பேச்சுக்கு முன்னாலேயே செயலாளர் நன்றி கூறிவிடுவார். பின்னரே திரு.வி.க.பேசுவார்.

 1940-ஆம் ஆண்டு யான் மயிலம் தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளனாகப் பணியாற்றினேன். அந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் மூன்றுநாள் மயிலம் மலையில் சைவ சித்தாந்த மகா சமாச மாநாடு நடைபெற்றது. அதனால் எனக்கு இது பற்றிய பட்டறிவு நிரம்ப உண்டு. அப்போதி லிருந்து யானும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டேன். அடுத்தடுத்துச் சீர்காழி, திருச்சி, மதுரை முதலிய ஊர்களில் நடைபெற்ற மாநாடுகட்கு யான் சென்றிருந்தேன் சீர்காழி மாநாட்டில் 'தமிழ்ச் சொல் மலர்' என்ற தலைப்பிலும், மதுரை மாநாட்டில் 'தன் பெருமை தானறியாத் தலைவன்’ என்ற தலைப்பிலும், யான் சொற்பொழிவாற்றினேன். மதுரை மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. ஆவார். சமாசத்தின் திங்கள் கூட்டங்களிலும் யான் பல ஊர்களில் திரு.வி.க. தலைமையிலும் மற்றவர்கள் தலைமையிலும் சொற்பொழிவு செய்துள்ளேன்.
 எதற்காக இவ்வளவு சொல்ல வேண்டி நேரிட்ட தெனில், இந்தக் காலத்தில் உள்ளவர்கட்குச் சமாசத்தின் அருமை பெருமை தெரியாது. இலமனுாரில் அகண்ட காவிரி என்னும் பெயர் பெற்றிருந்த காவிரி, கடலை நோக்கி வர வர ஆடுதாண்டும் காவிரியாய்க் சிறுத்து விட்டது போன்று அன்று ஆல மரமாய் இருந்த சமாசம் இன்று சிறு செடியாய்க் குறுகிவிட்டது. அன்று சமாசம், திருமுறைகள் சங்க இலக்கியங்கள் முதலிய நூல்களைப் பதிப்பித்த தன்றி, மேலும் பல நற்பணிகள் செய்து வந்தது. 'சித்தாந்தம்' என்னும் திங்கள் இதழும் உண்டு,