பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



38

தொடர்புறுத்துவார். பாடல்களைக் கற்பிப்பதில் அடிகளார் பின்பற்றிய மற்றொரு முறையும் குறிப்பிடத்தக்கது. அஃதாவது:-

 எடுத்துக் காட்டிற்காகச் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம்’ என்னும் நூலின் முதல் பாடலை நடத்தக்கூடிய முறையைக் காணலாம்:
  "உலகெலாமுணர்ந் தோதற் கரிய வன்
  
   நிலவு லாவிய நீர்மலி வேணியன் 
   அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் 
   மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

என்பது பாடல். முறையாவது:- வணங்குவாம் - வணங்கு வோம்-எப்படி வணங்குவது? வாயால் வாழ்த்திக் கொண்டே கைகளால் வணங்குவாம் - வாழ்த்தி வணங்கு வாம். எதை வணங்குவாம்? அடியை வணங்குவாம். அடி எப்படிப்பட்டது? மலர்ந்த அடி - சிலம்பு அணிந்த அடி - மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.

 யாருடைய அடி? சிவனுடைய திருவடி. சிவன் எத் தகையவன்? அம்பலத்திலே ஆடக் கூடியவன்-அம்பலத்து ஆடுவான். இன்னும் எத்தகையவன்? அளவற்ற சோதிமயமானவன்-ஒளி வடிவானவன் - அலகுஇல் சோதியான். இன்னும் எவ்வியல்பினன்? - கங்கை நீர் நிறைந்துள்ள வேணியை - முடியை உடையவன் - நீர்மலி வேணியன். அந்த வேணியில் இன்னும் என்ன இருக்கிறது? பிறைநிலவு உலவுகிறது - தங்கியுள்ளது - நிலவு உலாவிய நீர்மலி வேணியன். மேலும் சிவன் எவ்வியல்பினன்? அவனது பெருமையை உலகம் எல்லாம் - உலகத்து உயிர்கள் எல்லாம் முற்றும் உணர்ந்து முழுவதும் எடுத்து ஒதுதற்கு - சொல்வதற்கு அரியவனாய் இருப்பவன் - அதாவது சொல்ல முடியாத அளவுக்கு மிகுந்த பெருமை உடையவன்